மணப்பாறை அருகே நள்ளிரவில் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

மணப்பாறை அருகே நள்ளிரவில் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தொழிலாளி பலி
தொழிலாளி பலி
Published on

மணப்பாறை:

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கொட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 45), கூலித்தொழிலாளி. இவருக்கு ராசாத்தி வயது (40) என்ற மனைவியும் 3 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

அனைவரும் அவர்களது வீட்டில் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் திடீரென வீட்டின் அருகே உள்ள தனியார் பள்ளியின் பழைமையான சுற்றுச்சுவர் இடிந்து செல்வகுமார் வீட்டின் பின் பகுதியில் விழுந்தது.

இதில் செல்வக்குமார் வீட்டின் பின்பக்க சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்து செல்வக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி ராசாத்தி இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடினார்.

இதைப்பார்த்து மகள் மற்றும் மகன்கள் அலறல் சப்தம் போடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து ராசாத்தியை மீட்டு சிகிச்சைக்காக மணப் பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த செல்வகுமாரின் உடலை மீட்டனர்.

இதையடுத்து மணப்பாறை போலீசார் இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சுவர் இடிந்து விழுந்தது குறித்து தகவல் அறிந்த மணப்பாறை வட்டாட்சியர் லெஜபதிராஜ் மற்றும் வருவாய்துறையினரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி ஆய்வு செய்தனர்.

இதில் இடிந்து விழுந்த பள்ளியின் சுவர் மிகவும் பழமையானது என்பதுடன் மணப்பாறை பகுதியில் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த மழையினால் சுவர் முற்றிலுமாக ஊறிப் போய் இருந்த நிலையில் இடிந்து வீட்டின் மீது விழுந்தது தெரியவந்தது.

நள்ளிரவில் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com