

மதுரை:
சென்னையை சேர்ந்த டிராபிக் ராமசாமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “மதுரை நகரில் ஓடும் ஆட்டோக்களில் 3 நபர்களை மட்டுமே
ஏற்றிச்செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் சில ஆட்டோக்களில் 10 முதல் 12 நபர்களை ஏற்றிச்செல்கின்றனர். இதனால் ஆட்டோக்கள் விபத்தில் சிக்கி,
பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து விதிமுறையை மீறி அளவுக்கு அதிகமான பயணிகளை
ஏற்றிச்செல்லும் ஆட்டோ டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, “மதுரை நகர் பகுதியில் தற்போது 16,200 ஆட்டோக்கள் ஓடுகின்றன. கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து 2019-ம் ஆண்டு வரை விதிகளை
மீறிய 1,065 ஆட்டோக்களின் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது” என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், “ஆட்டோக்களில் 10 பேருக்கு மேல் பயணம் செய்யும்போது விபத்து ஏற்பட்டால் அவர்களுக்கு இழப்பீடு வழங்க முடியாது. தமிழகத்தில்
குறிப்பாக மதுரையில் எத்தனை ஆட்டோக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, போலீசார் மற்றும் அரசியல்வாதிகள் பெயரில் எத்தனை ஷேர் ஆட்டோக்கள்
ஓடுகின்றன, தமிழ்நாடு முழுவதும் எத்தனை ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் உள்ளன, அவற்றில் விதிமுறைகளை மீறிய எத்தனை ஷேர் ஆட்டோக்கள் மீது
வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளன? என்பது தொடர்பாக விரிவான பதில் அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.