9, 10, 11ம் வகுப்பு மாணவர்களின் ஆல்-பாஸ் உத்தரவை ரத்து செய்ய முடியாது- சென்னை ஐகோர்ட்

9, 10, 11-ம் வகுப்பு வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்ற அரசாணையை ரத்து செய்ய முடியாது என்று சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை ஐகோர்ட்
சென்னை ஐகோர்ட்
Published on

சென்னை:

தமிழகத்தில் 9-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்றதாக அறிவித்த அரசாணையை ரத்து செய்ய மறுத்த சென்னை ஐகோர்ட்டு, 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு தனி தேர்வு நடத்திக் கொள்ள தனிப்பட்ட பள்ளிகளுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, 9-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை கடந்த பிப்ரவரி 25-ந் தேதி அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, பொது தேர்வு நடத்தவில்லை என்றாலும், பள்ளிகள் அளவில் தேர்வு நடத்தப்பட வேண்டும்.

அப்போது தான் 11-ம் வகுப்பில் சேரும்போது மாணவர் விரும்பும் பாடத்திட்டத்தில் சேர்க்கை வழங்க முடியும். தேர்வுகள் ரத்து செய்வது தொடர்பாக எந்த கலந்தாலோசனையும் மேற்கொள்ளவில்லை. தேர்தலை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், பொதுநலன் சார்ந்த வி‌ஷயங்களில் அதிகாரிகள் உரிய ஆலோசனைகளுக்கு பிறகே முடிவுகள் எடுப்பர்.

எந்த கலந்தாலோசனையும் மேற்கொள்ளவில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது. அரசாணையை ரத்து செய்ய முடியாது. அதேசமயம், 10-ம் வகுப்பில் இருந்து 11-ம் வகுப்புக்கு செல்லும் மாணவர்கள், விருப்ப பாடத்தை தேர்வு செய்யும் வகையில், அவர்களின் தகுதியை கண்டறிய பள்ளிகள், தனித் தேர்வு நடத்திக் கொள்ளலாம். இதுசம்பந்தமாக பள்ளிக் கல்வித்துறை உரிய வழிகாட்டு விதிகளை அறிவிக்க வேண்டும் என்று எனவும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com