அதியமான்கோட்டை அருகே லாரிகள் மோதல்- 2 தொழிலாளிகள் பலி

அதியமான்கோட்டை அருகே லாரிகள் மோதிய விபத்தில் தொழிலாளிகள் 2 பேர் பலியானார்கள். மேலும் டிரைவர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து
விபத்து
Published on

நல்லம்பள்ளி:

பெங்களூருவில் இருந்து விருத்தாசலத்திற்கு பழம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி புறப்பட்டது. இந்த லாரியை கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் ஏழுமலை (வயது 31) ஓட்டி வந்தார். இந்த லாரியில் கூலித்தொழிலாளிகளான சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (50), கள்ளக்குறிச்சி மாவட்டம் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த பழனிவேல் (40) ஆகியோர் வந்தனர்.

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே உள்ள கலெக்டர் பங்களா பின்புறம் உள்ள தேசிய நெடுஞ்சாலை செல்பி பாலம் பகுதியில் இந்த லாரி நேற்று நள்ளிரவு வந்து கொண்டிருந்தது. அப்போது ஏற்கனவே டீசல் காலியாகி சாலையோரமாக நின்றிருந்த லாரியின் பின்புறம், ஏழுமலை ஓட்டி வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் தொழிலாளி பழனிவேல் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் வெங்கடேசன் மற்றும் டிரைவர் ஏழுமலை, தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பகுதியை சேர்ந்த மற்றொரு லாரி டிரைவர்களான வசந்தகுமார் (30), வெங்கடேசன் (37) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அதியமான்கோட்டை போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து வந்து படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி மற்றொரு தொழிலாளி வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com