

காவிரி டெல்டா வேளாண் மண்டல சட்ட மசோதாவை கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் நிறைவேற்றினார்.
இந்த மசோதாவின்படி தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களும், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து தலா 5 வட்டாரங்களும் வேளாண் பாதுகாப்பு மண்டலத்தின் கீழ் வந்தன.
காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டதால் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்பட இயற்கை எரிவாயுக்கான ஆய்வு செய்யும் பணிகளையும் அவற்றை சுத்திகரித்து கொண்டு செல்லும் பணிகளையும் நடத்த இயலாதபடி தடை விதிக்கப்பட்டது.
இதுதவிர துத்தநாக உருக்கு ஆலை, இரும்பு தாது உருக்கு ஆலை, கப்பல் உடைக்கும் தொழிற்சாலை ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளை மீறினால் அதிகபட்சமாக 5 ஆண்டுகளும், ரூ.50 லட்சம் வரையும் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
இந்த மாற்று வழிகள் மூலம் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட்டால் அது நிச்சயமாக காவிரி டெல்டா பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும். இதையடுத்து இந்த விவகாரத்தில் தமிழக அரசு புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
காவிரி டெல்டா பகுதிகளில் சுற்றியுள்ள மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய நிபுணர் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் பகுதி நேர உறுப்பினரான பேராசிரியர் சுல்தான்அகமது இஸ்மாயில் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் சென்னை ஐ.ஐ.டி. சுற்றுச்சூழல் பேராசிரியை இந்துமதி எம்.நம்பி, தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழக சுற்றுச்சூழல் பேராசிரியை டாக்டர் மகேஸ்வரி, சென்னை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி கழக முன்னாள் இயக்குனர் டாக்டர் செல்வம், பொதுப்பணித்துறை திருச்சி மண்டல முதன்மை பொறியாளர் எஸ்.ராமமுத்து, பொதுப்பணித்துறை நிலத்தடி நீர் செயல் பொறியாளர் எஸ்.ராஜா, டிட்கோ பொது மேலாளர் கார்த்திகேயன் ஆகிய 6 பேர் அதில் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.
7 பேர் கொண்ட நிபுணர் குழு காவிரி டெல்டா பகுதிகளிலும், அதை சுற்றியுள்ள மாவட்டங்களான ராமநாதபுரம், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் ஆய்வு பணிகளை மேற்கொள்ளும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நிலத்தடி நீர், மண்வளம், நீர்பாசன ஆதாரங்கள், பயிர்களின் சாகுபடி, காற்றின் தரம் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து இந்த குழு ஆய்வு செய்யும்.
மேலும் மக்களின் வாழ்வாதாரம் குறித்தும் இந்த நிபுணர் குழு தகவல் சேகரித்து அறிக்கை தயார் செய்யும். அந்த அறிக்கையை அடுத்த 4 மாதத்துக்குள் தமிழக அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்று நிபுணர் குழுவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்...9 மாவட்டங்களில் செப்டம்பர் இறுதியில் உள்ளாட்சி தேர்தல்