காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு கர்நாடக அரசு தடையாக இருக்க கூடாது: ஜிகே வாசன் வேண்டுகோள்

கர்நாடக அரசு காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு மனிதாபிமான அடிப்படையில் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று ஜிகே வாசன் கூறியுள்ளார்.
ஜிகே வாசன்
ஜிகே வாசன்
Published on

சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் காவிரி குண்டாறு இணைப்புத் திட்டமானது 100 ஆண்டுகால கனவுத்திட்டம் மட்டுமல்ல விவசாயத்திற்கும், குடி நீருக்குமான மிக முக்கியமான திட்டமாகும். இந்நிலையில் இத்திட்டத்திற்கு கர்நாடக அரசும், அம்மாநிலத்தில் உள்ள சில அமைப்பும் எதிர்ப்பு தெரிவிப்பது கண்டிக்கத்தக்கது.

இத்திட்டத்தின் முதல் கட்டத்திற்கு ரூ.6,941 கோடி மதிப்பில் அடிக்கல் நாட்டப்பட்டதன் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஏரிகளும், நிலங்களும் பயன்பெறும் வகையில் கால்வாய் வெட்டப்பட்டு தெற்கு வெள்ளாற்றுடன் இணைக்கப்படும்.

குறிப்பாக வெள்ளக் காலங்களில் காவிரியில் உபரியாக வெளியேறும் நீரை தமிழகத்துக்கு பயன்படுத்துவதற்காகத்தான் காவிரி குண்டாறு இணைப்புத் திட்டமானது கொண்டுவரப்படுகிறது. வெள்ளக்காலங்களில் வரும் உபரி நீரை தமிழகம் பயன்படுத்த கர்நாடக மாநிலம் எதிர்ப்பு தெரிவிப்பது நியாயமற்றது.

அதே சமயம் கர்நாடகத்தில் தண்ணீர் பஞ்சம் என்றால் அப்போது காவிரியின் உபரி நீரை கர்நாடக மாநிலத்திற்கு பயன்படுத்திக்கொள்வது நியாயமானது. எனவே கர்நாடக அரசு காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு மனிதாபிமான அடிப்படையில் ஒத்துழைப்பு தர வேண்டும்.

இருப்பினும் மத்திய அரசும் இப்பிரச்சினையில் தலையிட்டு இத்திட்டமானது தமிழகத்தில் தொடங்கப்பட, செயல்பட கர்நாடக அரசு எவ்விதத்திலும் தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசும் இத் திட்டப்பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு செயல்படுத்திட அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com