

திருச்செந்தூர்:
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், விவசாயிகளை பாதிக்கும் விதமாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரியும், இந்த வேளாண் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் அ.தி.மு.க. அரசை கண்டித்தும், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தின் முடிவுபடி நேற்று தமிழகம் முழுவதும் கருப்பு கொடியேந்தி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் முன்பு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் கருப்பு கொடியேந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சண்முகையா, மாநில மாணவரணி துணை செயலாளர் உமரி சங்கர், அய்யாத்துரை பாண்டியன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பூபதி, பிரம்மசக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவை தலைவர் அருணாசலம், தலைமை செயற்குழு உறுப்பினர் பில்லா ஜெகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர், பொதுக்குழு உறுப்பினர்கள் காவல்காடு சொர்ணகுமார், ஒன்றிய செயலாளர்கள் பாலசிங், இசக்கிபாண்டியன், இளையராஜா, ஜெயக்கொடி, நகர செயலாளர்கள் கல்யாணசுந்தரம், விவசாய அணி அமைப்பாளர் ஆஸ்கர், கிராம பஞ்சாயத்து தலைவர் மகாராஜன் மற்றும் விவசாய பெருமக்கள், திமுக தொண்டர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவைகுண்டம் நகர அ.தி.மு.க. முன்னாள் செயலாளரும், விவசாய சங்க தலைவருமான மாடசாமி அக்கட்சியில் இருந்து விலகி தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.வை சந்தித்து தி.மு.க.வில் இணைத்துகொண்டார்.
மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் இளங்கோ மற்றும் அய்யாத்துரை பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.