

மதுரை:
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இருப்பவர் டாக்டர் சரவணன். இந்த தேர்தலில் இவர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் திருப்பரங்குன்றம் தொகுதி தி.மு.க. கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
மேலும் டாக்டர் சரவணன் எம்.எல்.ஏ.வுக்கு எந்த தொகுதியும் ஒதுக்கப்படவில்லை. இதனால் அவர் அதிர்ச்சியில் இருந்தார். சென்னை அண்ணா அறிவாலயம் சென்று தி.மு.க. தலைமையிடம் தனது ஏமாற்றத்தை தெரிவிக்கப்போவதாக கூறி வந்தார்.
இந்த நிலையில் டாக்டர் சரவணன் எம்.எல்.ஏ. இன்று காலை திடீரென பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகனை சந்தித்தார். பின்னர் அவரது முன்னிலையில் பா.ஜனதாவில் ஆதரவாளர்களுடன் இணைந்தார்.
இந்த நிலையில் அவருக்கு பா.ஜனதா சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என கருதப்படுகிறது. மதுரை வடக்கு தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படாத நிலையில் மதுரை வடக்கு தொகுதியில் டாக்டர் சரவணன் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் பொதுச்செயலாளர் சீனிவாசன் போட்டியிடுவார் என கருதப்பட்டது. அவரும் கட்சி அலுவலகம் திறந்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் டாக்டர் சரவணன் பெயர் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியானதை தொடர்ந்து பா.ஜனதாவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மதுரை புதூரில் உள்ள பா.ஜனதா அலுவலகம் முன்பு திரண்ட அவர்கள், கட்சியில் சேர்ந்த உடனேயே போட்டியிட வாய்ப்பு கொடுக்கக்கூடாது. நீண்ட நாள் உழைத்த சீனிவாசனுக்குத்தான் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என கூறி கோஷங்கள் எழுப்பினர்.
பா.ஜனதாவின் இந்த தடீர் போராட்டம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.