

சென்னை:
அறிஞர் அண்ணாவின் 52-வது நினைவு நாள் நாளை அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி, நாளை தி.மு.க. சார்பில் அமைதிப் பேரணி நடக்கிறது. காலை 6.30 மணியளவில் வாலாஜா சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகில் இருந்து பேரணி புறப்படுகிறது.
அங்கிருந்து காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிடம் செல்கிறார்கள். காலை 7 மணி அளவில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இந்த அமைதிப் பேரணிக்கு தலைமை தாங்குகிறார். தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் உடன் செல்கிறார்கள்.
அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்கள். இதுகுறித்து தி.முக. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
காஞ்சி தந்த காவியத் தலைவர், உலகத் தமிழர்கள் உள்ளங்களில் எல்லாம் சிம்மாசனம் போட்டு கொலு வீற்றிருக்கும் செந்தமிழ் அறிஞர், தமிழ்மொழி உயர்வுக்காகவும், தமிழர்களின் மேம்பாட்டுக்காகவும் தமிழ்நாட்டின் சிறப்புக்காகவும் வாழ்நாள் முழுவதும் ஓயாது பாடுபட்ட உத்தமர்.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகத்துக்கு அறிமுகம் செய்து வைத்த ஆற்றலாளர். ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்ற பெயரை ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றம் செய்து தாய்க்கு தந்த தனிப்பெரும் தனயன். சொக்க வைக்கும் சொற்பொழிவாளர், எழுத்து வேந்தர், தென்னகத்தின் மிகப்பெரும் அரசியல் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 7 மணிக்கு அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும்.
முன்னதாக அமைதிப் பேரணி நடக்கிறது. இதில் முன்னாள், இன்நாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.