கொரோனாவை குணப்படுத்தும் லேகியத்துக்கு ஆந்திர அரசு அனுமதி

ஆந்திராவில் கொரோனாவை குணப்படுத்தும் என்று பரபரப்பை ஏற்படுத்திய மூலிகை லேகியத்துக்கு அந்த மாநில அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நகரி:

ஆந்திராவில் கொரோனாவை குணப்படுத்தும் என்று பரபரப்பை ஏற்படுத்திய மூலிகை லேகியத்துக்கு அந்த மாநில அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபட்டினத்தைச் சேர்ந்தவர் வைத்தியர் ஆனந்தய்யா. இவர் தயாரித்த லேகியம், கொரோனா தொற்று நோயை குணப்படுத்துவதாக செய்தி வெளியானது.

இதனால் கடந்த வாரம் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள், அங்கிருந்து வெளியேறி ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களில் கிருஷ்ணாபட்டினம் கிராமத்தில் குவிந்தனர். சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் வரிசை கட்டி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் கொரோனா பரவும் சூழலும் ஏற்பட்டதால் நிலைமையை சமாளிக்க போலீசார் வந்தனர்.

இந்த விவகாரம் ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டிக்கு சென்றதையடுத்து ஆனந்தய்யா தயாரித்துள்ள லேகியம் கொரோனாவை குணப்படுத்துமா என்ற உண்மையை ஆய்வு செய்து தெரிவிக்குமாறு ஐ.சி.எம்.ஆர். (இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்) குழுவினரை கேட்டுக்கொண்டார்.

அந்த ஆய்வு முடிவுகள் வெளிவரும் வரை மருந்து வினியோகத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறும் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டார். இதற்கிடையே ஆனந்தய்யாவை பாதுகாப்பான இடத்துக்கு கூட்டிச்சென்று அரசின் கட்டுப்பாட்டில் தங்க வைத்தனர்.

இந்நிலையில், ஆந்திர மாநில அரசு இதில் தலையிட்டு, ஆனந்தய்யா தயாரித்த மருந்தில் பக்க விளைவுகள் உள்ளதா என்ற கோணத்தில், ஆய்வு செய்ய உத்தரவிட்டு, மருந்தின் வினியோகத்தை தற்காலிகமாக நிறுத்தியது.

இதைத்தொடர்ந்து, ஆனந்தய்யா தயாரித்த லேகியம் குறித்து ஐதராபாத்தில் ஆய்வு நடைபெற்ற நிலையில், கண்ணில் விடும் ஒருவகை சொட்டு மருந்தை தவிர லேகியத்துக்கு மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இதற்கிடையே கொரோனா குணமாக லேகியம் தயாரித்த வைத்தியர் ஆனந்தய்யாவே கொரோனாவுக்கு இறந்ததாக தகவல் பரவியது.

ஆனால் வைத்தியர் இறக்கவில்லை என்றும், அவரிடம் லேகியம் வாங்கி சாப்பிட்ட ஆசிரியர் ஒருவர் தான் இறந்ததாகவும் தெரிகிறது. லேகியம் சாப்பிட்டதும் அந்த கொரோனா பாதிக்கப்பட்ட ஆசிரியர் குணம் அடைந்ததாகவும், பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே வைத்தியர் ஆனந்தய்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘என்னிடம் தற்போது 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே லேகியம் கையிருப்பில் உள்ளது. கொரோனா நோயாளிகள் அனைவருக்கும் என்னால் உடனடியாக லேகியம் கொடுக்க இயலாது.

மூலிகை பொருட்கள் கிடைத்ததும் அரசு அனுமதியுடன் லேகியத்தை இலவசமாக வழங்குவேன்’ என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com