பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து ஆயிரக்கணக்கானோருடன் அமித்ஷா ரோடு ஷோ

அமித்ஷா வருகையையொட்டி லாஸ்பேட்டை மெயின்ரோடு முழுவதும் போலீசார், துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று மத்திய மந்திரி அமித்ஷா வாக்கு சேகரித்த காட்சி.
புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று மத்திய மந்திரி அமித்ஷா வாக்கு சேகரித்த காட்சி.
Published on

புதுவை சட்டசமன்ற தேர்தலில் பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, தேசிய தலைவர் நட்டா, மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், கிரிராஜா சிங் ஆகியோர் தேர்தல் பிரசாரம் செய்துள்ளனர்.

காரைக்கால் மாவட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

இந்நிலையில் புதுவையில் இன்று மத்திய மந்திரி அமித்ஷா ரோடு ஷோ நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக லாஸ்பேட்டை சுபாஷ் சந்திரபோஸ் சிலையிலிருந்து சிவாஜி சிலை வரை திறந்த வேனில் மக்களை சந்தித்து பா.ஜனதா வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தபடி செல்வதற்கான திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிவாஜி சிலை அருகில் அலங்காரம் செய்யப்பட்ட திறந்த வேன் தயாராக நிறுத்தப்பட்டிருந்தது. காலை 8 மணி முதல் பா.ஜனதா தொண்டர்கள் லாஸ்பேட்டை உழவர் சந்தை முன்பு குவிய தொடங்கினர். புதுவையின் பல்வேறு தொகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் அங்கு குவிந்தனர். காலை 10.30 மணிக்கு சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுவை விமான நிலையத்துக்கு அமித்ஷா வந்தார்.

பின்னர் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தை பார்த்து கை அசைத்தார். இதனை தொடர்ந்து அலங்கார வேனில் ஏறி ரோடு ஷோ சென்றார். மலரட்டும் மலரட்டும் தாமரை மலரட்டும், ஒளிரட்டும், ஒளிரட்டும், புதுவை ஒளிரட்டும் என ஊர்வலத்தில் பங்கேற்றோர் கோ‌ஷம் எழுப்பியபடி சென்றனர்.

லாஸ்பேட்டை கல்லூரி மெயின்ரோடு முழுவதும் அலங்கார வாகனத்தில் நின்றபடி இருபுறமும் இருந்து மக்களை பார்த்து கையசைத்தபடி தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தும், வெற்றி சின்னமாக இரு விரலை வி வடிவில் காட்டிக்கொண்டே வந்தார். அமித்ஷாவை பார்க்க வீடுகளின் மாடியில் திரண்டு இருந்த மக்கள் அவர் மீது மலர்களை தூவினர். வண்டியில் வைக்கப்பட்டிருந்த பூக்களை எடுத்து பொதுமக்கள் மீது அமித்ஷா வீசினார்.

ஆயிரக்கணக்கில் ஆண்களும், பெண்களும் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

சுமார் ஒரு கி.மீ. தூரம் ஊர்வலம் வந்தது. மகாவீர் நகர், பாரதிநகர் வீதிக்கு ஊர்வலம் வந்தபோது வாகனம் நிறுத்தப்பட்டது. அவர் அங்கிருந்து இறங்கி காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

அமித்ஷா வாகனத்தில் மத்திய மந்திரி அர்ஜூன் ராம்மெக்வால், மேலிட பார்வையாளர் நிர்மல் குமார் சுரானா, வேட்பாளர்கள் நமச்சிவாயம், கல்யாண சுந்தரம், சாமிநாதன், ஏம்பலம் செல்வம் ஆகியோர் உடனிருந்தனர். அமித்ஷா ரோடு ஷோ சிவாஜி சிலை வரை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அரை கி.மீ. முன்னதாகவே ஊர்வலம் நிறுத்தப்பட்டது. அமித்ஷா பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் எங்கும் பேசவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com