

திருவனந்தபுரம்:
கேரளாவில் வருகிற 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.
இத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக மலையாள நடிகர் சுரேஷ் கோபி திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார். டெல்லி மேல்சபை எம்.பி.யாக இருக்கும் நடிகர் சுரேஷ் கோபியின் பதவி காலம் முடிய இன்னும் ஓராண்டு இருக்கிறது. அதற்குள் கட்சி மேலிடம் திருச்சூர் தொகுதியில் போட்டியிடுமாறு அவரை கேட்டுக்கொண்டது.
இதையடுத்து அவரும் திருச்சூர் தொகுதியில் களம் இறங்கி உள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் இவர் போட்டியிட்டார். அதில் திருச்சூர் தொகுதியில் கணிசமான வாக்குகளை வாங்கி இருந்தார். எனவே இந்த தேர்தலில் அவர் திருச்சூர் தொகுதியில் வெற்றி பெறுவார் என பாரதிய ஜனதா கட்சியினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.தேர்தல் பிரசாரத்திற்கு இடையே அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசியலில் ஈடுபட வேண்டும் என்று விரும்பினேன். அதற்காக சினிமாவையும், நடிப்பையும் கைவிட மாட்டேன். நல்ல கலைஞனுக்கு உண்மையான மனம் இருக்கும். அதை நான் உணர்கிறேன். ஒருபோதும் அதனை கைவிடமாட்டேன். அரசியலுக்கு வந்ததால் நடிப்பை நிறுத்தி விடமாட்டேன்.
அரசியலில் நேரம் நன்றாக இருந்தால் எல்லாம் சரியாக நடக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் நல்லமுறையில் முடியும். எனது மேல்சபை எம்.பி. பதவிகாலம் முடிய இன்னும் ஓராண்டு இருக்கிறது. எனது தலைவர் விரும்பினால் மீண்டும் அதே பொறுப்பில் தொடர்வேன். அதற்கு முன்பு மக்கள் இங்கு என்னை தேர்ந்தெடுத்தால் இந்த பணியை மேற்கொள்வேன்.
கேரளாவில் பிரபலமாக இருந்த கம்யூனிஸ்டு தலைவர்கள் இ.கே.நாயனார், காங்கிரஸ் தலைவர் கருணாகரன் ஆகியோருடன் எனக்கு நல்ல தொடர்பு இருந்தது.
ஒரு கட்டத்தில் நான் மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கு, பாரதிய ஜனதா கட்சி சரியாக இருக்கம் என்று கருதினேன். எனவே தான் அக்கட்சியில் இணைந்தேன்.
சபரிமலை பிரச்சினையை பொறுத்தவரை பிற மத வழிபாட்டு தலங்களில் என்ன நிர்வாக நடைமுறைகள் இருக்கிறதோ, அதே நடைமுறையை இந்து கோவில்களுக்கும் வழங்க வேண்டும்.
அந்த வாய்ப்பை அவர்களுக்கு வழங்க மறுக்ககூடாது. இவ்வாறு அவர் கூறினார்.