திருப்பூர் மாவட்டத்தில் 993 புதிய துணை வாக்குச்சாவடிகள் அமைப்பு - மொத்த எண்ணிக்கை 3,486 ஆக உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் புதிதாக 993 துணை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 486 ஆக உயர்ந்துள்ளது.
ஆலோசனை கூட்டம் கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றபோது எடுத்த படம்.
ஆலோசனை கூட்டம் கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றபோது எடுத்த படம்.
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை புதிய துணை வாக்குச்சாவடி பட்டியல் அமைத்தல் தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான விஜயகார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமார், ஆர்.டி.ஒ.க்கள் ஜெகநாதன் திருப்பூர் ரங்கராஜன் உடுமலை கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாகுல் அமீது மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 1,000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து புதிதாக துணை வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தாராபுரம் தொகுதியில் 298 வாக்குச்சாவடிகள் இருந்தன. புதிதாக 70 துணை வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. காங்கேயம் தொகுதியில் 294 வாக்குச்சாவடிகள் இருந்தன. புதிதாக 96 துணை வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவினாசியில் 312 வாக்குச்சாவடிகள் இருந்தன. தற்போது புதிதாக 108 துணை வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் வடக்கு தொகுதியில் 362 வாக்குச்சாவடிகள் இருந்தன. தற்போது புதிதாக 190 துணை வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் தெற்கு தொகுதியில் 240 வாக்குச்சாவடிகள் இருந்தன. புதிதாக 169 துணை வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல்லடம் தொகுதியில் 407 வாக்குச்சாவடிகள் இருந்தன. புதிதாக 170 துணை வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உடுமலை தொகுதியில் 293 வாக்குச்சாவடிகள் இருந்தன. புதிதாக 100 துணை வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மடத்துக்குளம் தொகுதியில் 287 வாக்குச்சாவடிகள் இருந்தன. புதிதாக 90 துணை வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி மாவட்டத்தில் ஏற்கனவே 2 ஆயிரத்து 493 வாக்குச்சாவடிகள் இருந்தன. புதிதாக 993 துணை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஏற்கனவே இருந்த வாக்குச்சாவடி வளாகத்தில் 848 வாக்குச்சாவடிகளும், வேறு மையத்தில் 145 வாக்குச்சாவடிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 486 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள துணை வாக்குச்சாவடிகளின் பெயர் விவரங்கள் அடங்கிய பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு வழங்கப்பட்டது. கட்சியினர் கூறும்போது, துணை வாக்குச்சாவடிகள் பிரிக்கும்போது கட்சியினருடன் ஆலோசித்து பிரித்திருக்க வேண்டும். அதிகாரிகள் பிரித்துவிட்டு முடிவில் தங்களுக்கு தெரிவிக்கிறார்கள்' என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். மேலும் ஆலோசனை கூட்டத்திற்கான தகவல் அவசரகதியில் தெரிவிக்கப்பட்டு கூட்டம் நடத்தப்படுவதாகவும் கட்சியினர் புகார் தெரிவித்தனர்.

துணைவாக்குச்சாவடிகள் பிரிப்பது தொடர்பாக ஆட்சேபனை இருந்தால் நாளைக்குள் (சனிக்கிழமைக்குள்) கலெக்டர் அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என்று அதிகாரிகள் கூறினார்கள்.

ஆனால் அனைத்துக்கட்சியினர் எங்களுக்கு காலஅவகாசம் போதாது. ஒரு வாரம் காலம் அவகாசம் வேண்டும் என்று கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com