1.6 கோடி பேர் 2-வது கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தவில்லை: மத்திய சுகாதார அமைச்சகம்

2-வது டோஸ் தடுப்பூசியை அதிகமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் தான் செலுத்தாமல் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஜனவரி 15-ந் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் சுகாதாரப் பணியாளர்களுக்கும், அதைத்தொடர்ந்து முன்களப்பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பின்னர் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், அதைத் தொடர்ந்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

ஒவ்வொருவரும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும். இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 58 கோடியே 89 லட்சமாக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் முதல் டோஸ் போட்டவர்களில் ஒரு கோடியே 60 லட்சம் பேர் 2-வது கட்ட கொரோனா தடுப்பூசியை இன்னும் செலுத்தவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த மே 2-ந் தேதி 12 கோடியே 28 லட்சம் பேர் முதல் டோஸ் செலுத்தி இருக்கிறார்கள். அவர்களில் நேற்று வரை 11 கோடியே 56 லட்சம் பேர் 2-வது டோஸ் போட்டு இருந்தனர்.

ஒரு கோடி 65 லட்சம் பேர் இன்னும் 2-வது டோஸ் செலுத்தாமல் உள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் தான் 2-வது டோஸ் தடுப்பூசியை செலுத்தாமல் இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களது எண்ணிக்கை ஒரு கோடியே 6 லட்சமாக இருக்கிறது.

அதற்கு அடுத்தப்படியாக 45 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களில் 44 லட்சம் பேர் இன்னும் 2-வது டோஸ் தடுப்பூசியை போடாமல் உள்ளனர்.

கோவிஷீல்டு முதல் டோஸ் செலுத்திய 12 வாரங்களுக்கு பிறகு தான் 2-வது டோஸ் செலுத்த வேண்டும். கோவேக்சினை பொறுத்தவரை 4 வாரம் தான் இடைவெளி.

மே 2-ந் தேதி வரை முதல் டோஸ் செலுத்தியவர்களில் தற்போது உள்ள வரை 3 கோடியே 9 லட்சம் பேர் 2-வது டோஸ் செலுத்த தகுதியானவர்களாக இருக்கிறார்கள். மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் 2-வது டோஸ் செலுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com