

புதுடெல்லி:
டெல்லி சர்வதேச விமான நிலையத்தில், துபாயில் இருந்து விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவர்களில் 6 பேர், பிரபல வெளிநாட்டு கம்பெனிகளின் சிகரெட்டுகளை கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 7½ லட்சம் சிகரெட்டுகள் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 15 லட்சம் ஆகும். அவர்களிடம் மேலும் சோதனை நடத்தியபோது, அவர்கள் உடலில் 1¼ கிலோ எடையுள்ள தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. அதன் மதிப்பு ரூ.64 லட்சம் ஆகும்.
இதற்கு முன்பு ரூ.2 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்தி வந்திருப்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். கடத்தல் சிகரெட் மற்றும் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், அந்த 6 பயணிகளையும் கைது செய்தனர்.