பேச்சுவார்த்தையில் நீடிக்கும் இழுபறி: 24-ந்தேதி ஸ்டிரைக்கை தொடங்க போக்குவரத்து தொழிலாளர்கள் திட்டம்

பேச்சுவார்த்தையில் சுமூகமான உடன்பாடு எட்டப்படாமல் இழுபறி நீடித்து வரும் நிலையில், போக்குவரத்து கழக தொழிலாளர்கள் திட்டமிட்டபடி 24-ம்தேதி முதல் ஸ்டிரைக்கில் ஈடுபடலாம் என தெரிகிறது.
பேச்சுவார்த்தையில் நீடிக்கும் இழுபறி: 24-ந்தேதி ஸ்டிரைக்கை தொடங்க போக்குவரத்து தொழிலாளர்கள் திட்டம்
Published on

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான சம்பள சீரமைப்பு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

நிலுவைத் தொகைகளை உடனே வழங்க வேண்டும், போக்குவரத்து தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட ரூ.5,500 கோடி பி.எப். பணத்தை தர வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தினக்கூலி ஊழியர்களுக்கு கூடுதல் பணி நேரம் வழங்கக் கூடாது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

கடந்த மே மாதம் ஸ்டிரைக்கில் ஈடுபட்டபோது, அரசு வாக்குறுதி அளித்தபடி தொழிலாளர்களுக்கான நிலுவை தொகை உள்ளிட்ட எந்த கோரிக்கைகளையும் அரசு செய்யவில்லை என்று கூறி தொழிற்சங்கங்கள் மீண்டும் போராட்டத்தில் குதிக்க திட்டமிட்டன.

அதன்படி, வருகிற 24-ந்தேதிக்கு பிறகு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., பாட்டாளி, ம.தி.மு.க., தே.மு.தி.க., விடுதலை சிறுத்தை, எம்.எம்.எஸ்., திராவிடர் கழகம் உள்ளிட்ட 11 சங்கங்கள் அரசுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளன.

இதையடுத்து நேற்று முன்தினம் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தொழிலாளர் நலத் துறை தனி ஆணையர் தலைமையில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் எங்களது கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால் திட்டமிட்டப்படி வேலை நிறுத்தம் செய்வோம் என்று வலியுறுத்தினர்.

அதேசமயம் வேலை நிறுத்தத்தை தவிர்க்க அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. தொழிற்சங்க நிர்வாகிகளுடன் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரால் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண முயற்சி மேற்மேற்கொள்ளப்படும் என்று அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி தொழிற்சங்கங்கள் அமைச்சருடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருகின்றன. அடுத்த வாரம் ஆயுத பூஜை, விஜயதசமி, முகரம் போன்ற பண்டிகை நாட்களும் 2-ந்தேதி காந்தி ஜெயந்தியும் கொண்டாடப்படுவதால் தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறையாகும்.

இந்த நேரத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டால் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படும் என்பதை கருதி அதனை தவிர்க்க முன் ஏற்பாடுகளை செய்ய அரசு திட்டமிட்டு வருகிறது.


தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற தேவையான நிதி போக்குவரத்து கழகத்தில் இல்லை. அரசு நிதி உதவி வழங்கினால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

அதனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெருக்கடியில் சிக்கியுள்ள போக்குவரத்து கழகத்தை காப்பாற்ற பல ஆயிரம் கோடி ஒதுக்கினால் மட்டுமே இப்பிரச்சனை எதிர்காலத்தில் மீண்டும் ஏற்படாது என்று தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் கூறியதாவது:-

தொழிலாளர்களின் 30 சதவீத சேமிப்பு பணத்தை எடுத்து போக்குவரத்து கழகங்கள் செலவு செய்து வருகின்றன. இதனால் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய எந்த பணப் பலன்களும் கிடைப்பதில்லை. கடந்த 7 வருடமாக ஓய்வூதியம், வைப்பு நிதி, பணிக்கொடை தொகை ஆகியவற்றை எடுத்து ரூ.7000 கோடி செலவு செய்து விட்டனர்.

இதனால் ஒய்வு பெறும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்கள் பணத்தை எடுத்து பயன்படுத்தக்கூடாது. ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி சம்பளம் வழங்க வேண்டும், பென்சன் 1-ந்தேதி கிடைக்க வேண்டும், விபத்துக்கு காரணமான ஓட்டை உடைசலான பஸ்களை மாற்றி புதிய பஸ்கள் விட வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.

இந்த கோரிக்கைகளை பரிசீலித்த பின்னர் சம்பள உயர்வு ஒப்பந்தம் பற்றி பேசலாம் என்றோம். ஆனால் இதுவரையில் எந்த கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை.

முக்கிய பிரச்சனைகளை விட்டுவிட்டு சம்பள உயர்வு பற்றி மட்டும் பேச முன் வருகிறார்கள்.

தொழிலாளர்களுக்கு 50 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும். குறைந்தபட்ச சம்பளமாக ரூ.21,000 நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம்.

25-ந்தேதி அமைச்சருடன் நடக்கும் பேச்சுவார்த்தையில் இவற்றையெல்லாம் பற்றி பேசி முடிவு எடுக்க வேண்டும். மீண்டும் அலட்சிய போக்கில் செயல்பட்டால் வேலை நிறுத்தம் செய்வதுதான் ஒரே வழி.

தொழிலாளர்களின் உணர்வுகளை புரிந்து அரசு செயல்பட வேண்டும், அரசு கேட்ட கால அவகாசம் இதுவரையில் கொடுக்கப்பட்டுள்ளது.

வேலை நிறுத்தத்தை முடக்க மாற்று வழியில் யோசிப்பதை விட தொழிலாளர்களின் நியாயமான தேவைகளை நிவர்த்தி செய்து பண்டிகை காலங்களில் பஸ் போக்குவரத்து பாதிக்கப்படாமல் பார்த்து கொள்வது அரசின் கடமையாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com