3 தனியார் நிறுவனங்களின் பால் தரம் குறைந்தவையே: உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் பதில் மனு தாக்கல்

தமிழகத்தில் மூன்று தனியார் பால் நிறுவனங்களின் பாலின் தரம் குறைந்தவையே என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
3 தனியார் நிறுவனங்களின் பால் தரம் குறைந்தவையே: உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் பதில் மனு தாக்கல்
Published on

தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலில் கலப்படம் இருப்பதாகவும் ரசாயன பொருட்கள் கலந்திருப்பதாகவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டினார். மேலும், குறிப்பிட்ட தனியார் பால் நிறுவனங்களின் பால், பரிசோதனைக்கு அனுப்பியிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்று தனியார் பால் நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. அந்த நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவில், ‘அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் பால் நிறுவனங்கள் மீது ஆதாரம் இல்லாமல் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் நிறுவனங்களின் பாலை எந்த ஆய்வகத்திலும் சோதனை செய்யாமல் தன்னிச்சையாக குற்றச்சாட்டுகளை கூறுகிறார்.

எனவே அமைச்சர் ராஜந்திர பாலாஜி எங்கள் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்யும் பால் மற்றும் பால் பொருட்கள் தொடர்பாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூற தடை விதிக்க வேண்டும். எங்கள் நிறுவனங்களின் பெயர்களுக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக தலா ரூ.1 கோடி நஷ்ட ஈடாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தருமாறு உத்தரவிட வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

இந்நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று உயர்நீதிமன்றத்தில் தனது பதில் மனுவை தாக்கல் செய்தார். காசியாபாத் ஆய்வக அறிக்கையை ஆதாரமாக வைத்து தாக்கல் செய்த அந்த மனுவில், 3 தனியார் பால் நிறுவனங்களின் பால் தரம் குறைந்தவையே என்று குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com