

கவுண்டம்பாளையம்:
கோவை வடக்கு மாவட்ட த.மா.கா. தலைவர் ஜவகர் இல்ல திருமண விழா கவுண்டம்பாளையத்தில் இன்று நடந்தது. விழாவில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நீட் தேர்வை எழுதியவர்களுக்கும், எழுதாதவர்களுக்கும் சம வாய்ப்பு அளிக்க வேண்டும். தமிழகத்தில் ஏதாவது ஒரு பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும். எந்த பகுதியில் அமைத்தாலும் ஏழை மக்கள் பயன் அடைவார்கள்.
கேரள அரசு பவானி ஆற்றில் ஏற்கனவே 2 அணைகளை கட்டி விட்டது. தற்போது 3-வதாக புதிய அணை கட்ட முயற்சிக்கிறது. இனியாவது மத்திய- மாநில அரசுகள் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும்.
டெல்லியில் சில விவசாயிகளும், தமிழகத்தில் பல இடங்களில் விவசாயிகளும் போராடி கொண்டு வருகிறார்கள். அவர்களது போராட்டத்தை கவனத்தில் கொண்டு மத்திய -மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் இதுவரை நடை பெறாததால் உள்ளாட்சிகளில் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. விரைவில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். அ.தி.மு.க.வில் இரு அணிகள் இணைவது அவர்களது உட்கட்சி பிரச்சினை. மேலும் 2 அணிகள் இணைவது என்பது இயல்பான விஷயம். அவர்கள் இணைத்தால் தமிழகத்துக்கும், மக்களுக்கும் நன்மை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாநில துணை தலைவர் கோவை தங்கம், முன்னாள் எம்.பி. சேலம் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகர், மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா, இளைஞரணி துணை தலைவர் அருண் பிரகாஷ், மாவட்ட தலை வர்கள் வி.வி.வாசன், அன்னூர் ராமலிங்கம், ஜவகர், குணசேகரன், நிர்வாகிகள் பொன் ஆனந்தகுமார், எஸ்.பி.சாமி, மயில்சாமி, ராஜ்குமார், வளர்மதி கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.