

சென்னை அம்பத்தூரில் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலையில் கைதான பயங்கரவாதிகளான காஜா மொய்தீன், சையதுஅலி நவாஸ், அப்துல் சமீம் ஆகியோர் கடந்த டிசம்பர் மாதம் தலைமறைவானார்கள்.
இவர்களை அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி பயங்கரவாதிகள் 3 பேருக்கும் உதவிகளை செய்ததாக பெங்களூரில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தலைமறைவான பயங்கரவாதிகளில் காஜாமொய்தீன், சையதுஅலி நவாஸ் இருவரும் டெல்லியில் பிடிபட்டனர். இவர்கள் டெல்லி போலீசாரால் கைது செய்யப்படுவதற்கு முன்னர், 2 பேரின் கூட்டாளியான அப்துல்சமீம், தனது நண்பர் தவுபீக்குடன் சேர்ந்து களியக்காவிளையில் சப்- இன்ஸ்பெக்டர் வில்சனை சுட்டுக்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது. இதற்கான பரிந்துரையை தமிழக அரசு செய்துள்ளது. இதனை ஏற்று மத்திய அரசு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கை விரைவில் என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்துல்சமீம் குமரி மாவட்டத்துக்கு தப்பிச் செல்லவும், காஜாமொய்தீன், சையதுஅலி நவாஸ் இருவரும் டெல்லிக்கு தப்பிச் செல்வதற்கும் பயங்கரவாதிகள் பலர் சிம்கார்டுகளை வாங்கி கொடுத்து உதவி செய்தது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் காஞ்சிபுரத்தில் இருந்து பயங்கரவாதிகளுக்கு சிம்கார்டுகள் சப்ளை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். பெங்களூரிலும் மேலும் சிலர் சிக்கினர். இதன்மூலம் 10 பேர் வரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.