

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சி தொடர்பாக, மத்திய மந்திரிகள் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் கஜேந்திர சிங் செகாவத் ஆகியோருக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கை காவிரி நதிநீர் தீர்ப்பாயம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. கடைமடை பகுதிகளுக்கு மாத வாரியாக தண்ணீர் வழங்க தற்போது காவிரி படுகையில் உள்ள அணைகள் போதுமானது என காவிரி நதிநீர் ஆணையமும், உச்சநீதிமன்றமும் தெரிவித்துள்ள நிலையில், புதிய அணை கட்டவேண்டும் என்ற கர்நாடகத்தின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்.
கர்நாடகாவின் புதிய அணை கட்டும் திட்டத்தை எதிர்த்தும், நீதிமன்ற அவமதிப்பு குறித்தும் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. நீர்மின் திட்டம் மற்றும் நதி பள்ளத்தாக்கு தொடர்பான நிபுணர்கள் மதிப்பீட்டுக் குழு ஏற்கனவே, மேகதாது திட்டத்தை நிராகரித்த நிலையில், தற்போது கர்நாடகா மீண்டும் அந்த அமைப்பை அணுகி உள்ளது தெரிய வந்துள்ளது.