

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. முக்கிய வணிகர் சங்கங்கள் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பதால் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால், குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்படுகின்றன. அ.தி.மு.க. உள்ளிட்ட சில தொழிற்சங்கத்தினர் பேருந்துகளை இயக்கி வருகின்றனர். எனினும் அரசுப் பேருந்துகளை இயக்கக் கூடாது என தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வகையில் சென்னை அண்ணா சாலையில் இன்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். வாகன போக்குவரத்து அதிகம் காணப்படும் முக்கிய பகுதியில், அண்ணா சிலை அருகே நடந்த இந்த மறியல் போராட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். எதிர்க்கட்சி தலைவர்களான திருநாவுக்கரசர், கி.வீரமணி, திருமாவளவன், ஜவாஹிருல்லா, எம்.எல்.ஏ.க்கள், சேகர் பாபு, மா.சுப்பிரமணியன் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.