

சென்னை:
ஜனாதிபதி விருதுகள் அறிவிப்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது என்று தமிழ் வளர்ச்சித்துறை விளக்கம் அளித்துள்ளது.
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஜனாதிபதி விருதுகள் அறிவிப்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதாக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் வாயிலாக செய்திகள் வந்துள்ளன. தமிழ் மொழிக்கு மட்டுமே 2004-ம் ஆண்டில் செம்மொழித் தகுதி வழங்கப்பெற்றது.
இதனை தொடர்ந்து, கர்நாடக மாநிலம் மைசூரில் மத்திய இந்திய மொழிகள் நிறுவனத்தின் வழியாக செயல்பட்டு வந்த தமிழ் பிரிவு பிரிக்கப்பட்டு சென்னையில் தமிழுக்கென தனி நிறுவனமாக செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் என்ற பெயரில் 2008-ம் ஆண்டு மே மாதம் முதல் இயங்கி வருகிறது.
இந்நிறுவனம் தன்னாட்சி பெற்ற நிறுவனமாகும். மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் இந்நிறுவனத்தால் மதிப்பு சான்றிதழ், நினைவுப்பரிசு, ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன் தொல்காப்பியர் விருது மற்றும் குறள் பீட விருதுகளும், மதிப்பு சான்றிதழ், நினைவுப்பரிசு, ரூ.1 லட்சம் பரிசுத்தொகையுடன் இளம் அறிஞர் விருது ஆகிய விருதும் வழங்கப்பட்டு வருகின்றன. 2005-06 ஆண்டு முதல் 2015-16 ஆண்டு வரை 66 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் தமிழுக்கென செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் நிறுவப்பட்டுள்ளதைப் போன்று, மத்திய அரசால் செம்மொழி என்று அங்கீகரிக்கப்பட்ட பிற மொழிகள் ஒரியா, கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகும். மேலும், சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபி, பாரசீகம் போன்ற மொழிகளுக்கு இவ்வாறு தனி நிறுவனம் அந்தந்த மாநிலங்களில் தன்னாட்சி அளிக்கப்பெற்று அமைக்கப்படவில்லை. மாறாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கிளை அலுவலகங்களாக மட்டுமே இயங்கி வருகின்றன.
எனவே, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மேற்கண்ட மொழிகளுக்கான விருதுகளுக்கு விண்ணப்பங்கள் பெற விளம்பரம் வெளியிடுகிறது. ‘மகரிஷி பத்ராயன் வியாஸ் சம்மான்’ விருதுக்கு நிகராக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் தொல்காப்பியர் விருதும் குறள் பீட விருதும் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வழியாக விளம்பரங்கள் வெளியிடப்பட்டு, இவ்விருதுகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, உரிய தேர்வுக் குழுவால் விருதாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய அரசின் அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, விருதாளர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
2013-14, 2014-15, 2015-16 ஆகிய மூன்றாண்டுகளுக்கும் சேர்த்து 2017-ம் ஆண்டில் விருதுகள் ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளன. 2016-17-ம் ஆண்டு விருதுகளுக்கான விளம்பரங்கள் தேசிய மற்றும் மாநில செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டு, விருதுகளுக்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. இதற்கான தேர்வுக் குழு நியமிக்கப்பட்டு விருதாளர்களை தேர்ந்தெடுக்க செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நம் தாய் மொழியாம் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து அளிக்கப்பட்டது மட்டுமின்றி, தன்னாட்சி அளிக்கப்பெற்ற செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஜனாதிபதி விருதுகள் வழங்கப்படுவதால் ஜனாதிபதி விருதுகள் அறிவிப்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதாக வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.