புதிதாக உருவாகும் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம்-பல்லாவரம்

புதியதாக உருவாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மறைமலைநகர், மதுராந்தகம், பல்லாவரம், தாம்பரம், பம்மல், குரோம்பேட்டை, அனகாபுத்தூர் ஆகிய நகரங்கள் இடம் பெறுகின்றன.
செங்கல்பட்டு சந்திப்பு
செங்கல்பட்டு சந்திப்பு
Published on

சென்னை:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரித்து செங்கல்பட்டு தனி மாவட்டம் ஆக்கப்படும் என்று சட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதேபோல் திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து தென்காசியை தனி மாவட்டமாக அறிவித்தார்.

இதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

சுதந்திர இந்தியாவுக்கு முன்பு செங்கல்பட்டை தலைமை இடமாக கொண்டு கலெக்டர் அலுவலகம் மற்றும் நீதிமன்றங்கள் செயல்பட்டன.

சுதந்திரம் அடைந்த பிறகு செங்கல்பட்டு மாவட்டத்தின் நிர்வாக பிரிவு தலைமை இடமாக சைதாப்பேட்டை பனகல் மாளிகை செயல்பட்டது.

1967-ம் ஆண்டு அண்ணா முதல்- அமைச்சர் ஆனதும் சைதாப்பேட்டையில் இருந்த தலைமை இடத்தை காஞ்சிபுரத்துக்கு மாற்றினார். நிர்வாக நகரம் காஞ்சிபுரமாகவும் நீதி நகரமாக செங்கல்பட்டும் செயல்பட்டது.

1997-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின்போது ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் சென்னை விமான நிலையம் வரை பரப்பளவில் மிக பெரிதாக இருந்ததால் செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு பிரிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மறைமலைநகர், மதுராந்தகம், பல்லாவரம், தாம்பரம், பம்மல், குரோம்பேட்டை, அனகாபுத்தூர் ஆகிய நகரங்கள் இடம் பெறுகின்றன.

கூடுவாஞ்சேரி, பீர்க்கன்கரணை, பெருங்குளத்தூர், மாடம்பாக்கம், செம்பாக்கம், திருநீர்மலை, மேடவாக்கம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், இடைக்கழிநாடு, கருங்குழி, அச்சிறுப்பாக்கம் ஆகிய பேரூராட்சிகளும் சேர்க்கப்படுகிறது.

குன்றத்தூர் பேரூராட்சி செங்கல்பட்டு மாவட்டத்தில் சேர்க்கப்படுமா? அல்லது காஞ்சிபுரம் மாவட்டத்தில் சேர்க்கப்படுமா என்பது வருவாய் வட்டம் பிரிக்கும் போது முடிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய மாவட்டத்தில் செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் இடம்பெறுகிறது. ஊராட்சி ஒன்றியங்களில் காட்டாங்கொளத்தூர், புனித தோமையர்மலை, திருப்போரூர், திருக்கழுக்குன்றம், சித்தாமூர், லத்தூர், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் ஆகியவை இடம் பெறுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com