

சென்னை:
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை நினைவுபடுத்தும் வகையில் தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் 150 அடி உயர காங்கிரஸ் கொடிக்கம்பம் அமைக்கப்படுகிறது.
பிரமாண்டமாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த கொடிக்கம்பத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அடிக்கல் நாட்டினார்.
இந்த கம்பத்தில் கையால் கொடியேற்ற இயலாது. இதற்காக பிரத்யேகமாக இரும்பு கயிறு தயார் செய்யப்படுகிறது. கொடி கம்பத்தின் பீட பகுதியில் அமைக்கப்படும் மோட்டார் மூலம் கொடியேற்றப்படும். வருடத்துக்கு குறைந்தது 7 கொடிகளாவது மாற்ற வேண்டும்.
இந்த கொடிக்கம்பம் சுமார் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் தயாராகிறது. இதற் கான செலவை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ராயபுரம் இரா.மனோகர் ஏற்றுள்ளார்.
அடிக்கல் நாட்டு விழாவுக்கு சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், வீரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காங்கிரஸ் அமைக்கும் இந்த கொடிக்கம்பம் தான் நாட்டிலேயே உயரமான அரசியல் கட்சி கொடிக்கம்பம் என்ற பெருமையை பெறுகிறது.
தேசியகொடியை பொறுத்தவரை நாட்டிலேயே மிக உயரமாக கர்நாடக மாநிலம் பெல்காமில் கோட்டை ஏரி அருகே அமைக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 365 அடி.
அடுத்ததாக இந்தியா - பாகிஸ்தான் எல்லையான அட்டாரியில் 360 அடி உயரத்திலும், மராட்டிய மாநிலம் கொலக்பூரில் 303 அடி உயரத்திலும், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 293 அடி உயரத்திலும், தெலுங்கானா மாநிலம் ஹூசைன் சாகர் ஏரிகரை அருகே 291 அடி உயரத்திலும், சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் 269 அடி உயரத்திலும், அரியானா மாநிலம் பரிதாபாத்தில் 250 அடி உயரத்திலும் தேசிய கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன.