

அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரசார பணிகளை தொடங்கிவிட்டன. கட்சிகளில் உள்ள முக்கிய தலைவர்கள் குஜராத்துக்கு சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
கடந்த வாரம் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி குஜராத்தில் சுற்றுப்பயணம் செய்து பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டி பேசினார்.
இந்நிலையில், வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
பா.ஜ.க.வை பெண்களுக்கு எதிரான கட்சி என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் பா.ஜ.க. மட்டுமே பெண்களுக்கு முக்கிய பதவிகளை அளித்து வருகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் பாதுகாப்பு தொடர்பான முக்கிய பதவிகளை பெண்கள் வகித்து வருகின்றனர்.
கடந்த 2014-ம் ஆண்டு முதல் வெளியுறவு துறை மந்திரியாக பணிபுரிந்து வருகிறேன். இப்போது நிர்மலா சீதாராமன் பாதுகாப்பு துறை மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.
பா.ஜ.க. ஆட்சியில் தான் நான்கு பெண் முதல் மந்திரிகளும், 4 பெண் கவர்னர்களும், ஆறு பெண் கேபினட் அமைச்சர்களும் பதவி வகித்து வந்துள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.