காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து தர வேண்டும் - சுரேஷ் எம்பி கோரிக்கை
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் 421 இடங்களில் போட்டியிட்ட காங்கிரசுக்கு 52 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது.
பாராளுமன்றத்தில் உள்ள மொத்த எம்.பி.க்கள் எண்ணிக்கையான 545-ல் 10 சதவீதம் இடங்களை அதாவது 55 இடங்களை பெறும் கட்சிக்குத்தான் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும்.
ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு 52 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளதால் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை. 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்காமல் போனது.
ராகுல் தலைமை ஏற்ற பிறகு 2-வது முறையாக காங்கிரஸ் கட்சி இத்தகைய மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஆனால் பிரதமர் மோடி இதுபற்றி கடந்த மாதம் 18-ந்தேதி பாராளுமன்றத்தில் பேசுகையில், “எம்.பி.க்கள் எண்ணிக்கையை பற்றி கவலைப்படாமல் அனைத்து கட்சியினரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும்” என்று பேசினார்.
பிரதமர் மோடியின் இந்த பேச்சை தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மத்திய பா.ஜனதா அரசு அது தொடர்பாக இதுவரை எதுவும் அறிவிக்கவில்லை.
இதையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து தர வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். கேரள மாநில காங்கிரஸ் எம்.பி.யான சுரேஷ் இது குறித்து கூறியதாவது:-
எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் கேட்கவில்லை.ஆனால் எதிர்க்கட்சியாக பணியாற்றும் தகுதி காங்கிரசுக்கு உள்ளது. பாராளுமன்றத்தின் 2-வது பெரிய கட்சியாக இருக்கும் காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை தர வேண்டும்.
எதிர்க்கட்சி சிறப்பாக பணியாற்றினால்தான் பாராளுமன்ற ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும் என்று பிரதமர் மோடி பேசினார். அவர் மனப்பூர்வமாக இதை சொல்லி இருந்தால் எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரசுக்கு தர வேண்டும்.
அதுபோல பாராளுமன்ற துணை சபாநாயகர் பதவியையும் எதிர்க்கட்சிக்கே விட்டுத் தர வேண்டும்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை பெறுபவர்களுக்கு மத்திய மந்திரிகள் அனுபவிக்கும் அனைத்து நிதிகளும், சலுகைகளும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அரசின் முக்கிய பங்களாவும் ஒதுக்கி கொடுக்கப்படும்.
ஆனால் காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை பா.ஜனதா விட்டுக் கொடுக்குமா? என்பதில் இழுபறி நிலவுகிறது.

