

புதுடெல்லி:
மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு வரும் மே மாதம் 1,3,5 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசிநாள் ஏப்ரல் 9-ம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, ஆளும் திரிணாமுல் கட்சியினர் எதிர்க்கட்சிகளை வேட்பு மனு தாக்கல் செய்ய விடுவதில்லை எனவும், வேட்புமனுக்களை அதிகாரிகள் வழங்குவது இல்லை எனவும் புகார் எழுந்தது. மனு தாக்கலை நீட்டிக்கும்படி நெருக்கடி கொடுக்கப்பட்டது. இதையடுத்து வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஒருநாள் நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. அதாவது நேற்று மாலை வரை (10-ம் தேதி) வேட்பு மனுதாக்கல் செய்யமுடியும் என்று அறிவித்தது. ஆனால் நேற்று காலை திடீரென அந்த உத்தரவை ரத்து செய்து விட்டது.
தேர்தல் ஆணையத்தின் இந்த திடீர் நடவடிக்கைக்கு எதிராக மாநில பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கான்வில்கர், சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தலில் தலையிட மறுத்த நீதிபதிகள், வேட்பு மனு தாக்கல் நீட்டிப்பு தொடர்பாக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தை நாடும்படி கேட்டுக்கொண்டனர்.
ஏற்கனவே கொல்கத்தா ஐகோர்ட்டில் பா.ஜ.க. சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அவசர மனுவும் இன்று விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. #WestBengalPanchayatelection