

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் இருந்து விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனை தள்ளுபடி செய்து தமிழக அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 28-ந் தேதி அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணையில் 5 ஏக்கர் வரை விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டும் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதை எதிர்த்தும், அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடனை ரத்து செய்யக்கோரியும் சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பி.அய்யாக்கண்ணு பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில் ‘5 ஏக்கருக்கு குறைவான விவசாய நிலம் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் கடன் தள்ளுபடி’ என்பதை நீக்கிவிட்டு, அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் மற்றும் நகைக்கடன் தள்ளுபடி என்பதை குறிப்பிட்டு அரசாணையை மாற்றியமைக்க வேண்டும் என கடந்த ஆண்டு ஏப்ரல் 4-ந் தேதி உத்தரவிட்டனர்.
மதுரை ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்ததுடன், தமிழக அரசின் மனு மீது பதிலளிக்குமாறு மனுதாரர் அய்யாக்கண்ணுவுக்கு கடந்த ஜூலை 3-ந் தேதி உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் அய்யாக்கண்ணு தாக்கல் செய்த மனுவுக்கு எதிர்ப்பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு சார்பில் மேலும் அவகாசம் கேட்கப்பட்டது.