

சூலூர்:
சூலூர் கருமத்தம்பட்டி சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடை முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போய்க்கொண்டிருந்தது.
இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் தனிப்படை அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
சம்பவத்தன்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணான பதில் கூறவே சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை போலீஸ்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியை சேர்ந்த சுப்பையன் மகன் வீரண்ணன் (26) கிருஷ்ணகிரியை சேர்ந்த அருண் பாண்டியன் மகன் வினோத் குமார் (22) மற்றும் சிவகாசியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் மணிகண்டன் (25) என்பதும், அவர்கள் அந்த பகுதியில் வாகனங்கள் திருடியதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து இவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.