

சென்னை:
மாடுகளை இறைச்சிக்காக விற்பதற்கு தடை விதித்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.
கடந்த 28-ந்தேதி இரவு சென்னை கிண்டியில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி.யில் மாணவர்கள் சிலர் மாட்டு இறைச்சி உணவு திருவிழாவுக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.
இது தொடர்பான புகைப்பட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த நிலையில் நேற்று மதியம் ஐ.ஐ.டி. வளாகத்தில் உணவு சாப்பிட சென்ற கேரளாவை சேர்ந்த மாணவர் சூரஜ்ஜை மாணவர்கள் சிலர் சுற்றி வளைத்து தாக்கினர்.
இந்த தாக்குதலில் சூரஜ்ஜின் வலது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. மாட்டு இறைச்சி உணவு திருவிழாவுக்கு அவர் ஏற்பாடு செய்து இருந்ததாக இந்த தாக்குதல் நடைபெற்று உள்ளது.
படுகாயம் அடைந்த சூரஜ்ஜுக்கு வானகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தினர். மாணவர் சூரஜ் தாக்கப்பட்டது தொடர்பாக ஐ.ஐ.டியில் படிக்கும் மாணவர்கள் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது 147, 341, 323, 506 (1) ஆகிய 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் அனைவரும் உத்தர பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.
இதற்கிடையே மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மற்றொரு மாணவர் மனீஷ்குமாரும் காயம் அடைந்துள்ளார். அவரது வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டு இருக்கிறது. அவருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மனீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் 50 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மாணவர்கள் தாக்குதலில் காயம் அடைந்த சூரஜ் சைவ உணவு சாப்பிடுபவர் ஆவார். மாட்டு இறைச்சி உணவு திருவிழா நடந்த போது அவர் அங்கு நின்று இருக்கிறார். அப்போது வந்த கும்பல் உணவு திருவிழாவுக்கு ஏற்பாடு செய்ததாக சூரஜ்ஜை தாக்கியது. தற்போது தெரிய வந்துள்ளது.
ஐ.ஐ.டி.யில் மாணவர் தாக்கப்பட்டதை கண்டித்து நேற்று இரவு கல்வி நிறுவனத் தின் நுழைவு வாயில் அருகே கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா (தமிழ்நாடு) அமைப்பை சேர்ந்தவர் கள் மாட்டு இறைச்சி உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இச்சம்பவத்தால் ஐ.ஐ.டி. வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர்.