கேள்வித்தாள் லீக் விவகாரம் - திருவனந்தபுரத்தில் சி.பி.எஸ்.இ. அலுவலகத்தை சூறையாடிய மாணவர்கள்
திருவனந்தபுரம்:
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வு கேள்வித்தாள்கள் வெளியான விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில் கேள்வித்தாள் வெளியான விவகாரத்தை தொடர்ந்து மாணவர்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
கேரளாவிலும் இது தொடர்பாக நடந்த போராட்டத்தில் வன்முறை சம்பங்கள் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எஸ்.எப்.ஐ. மாணவர் அமைப்பினர் திருவனந்தபுரத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. மண்டல அலுவலகத்தை நோக்கி கண்டன பேரணி நடத்தினர்.
மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து அந்த அலுவலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். மாணவர்களின் ஊர்வலம் அந்த அலுவலகத்தை நெருங்கியதும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதமும், தள்ளு முள்ளும் ஏற்பட்டது. போலீசாரின் தடையை மீறி மாணவர்கள் அந்த அலுவலகத்திற்குள் புகுந்தனர். அவர்கள் அந்த அலுவலகத்தின் கண்ணாடி ஜன்னல்களை கல்வீசி உடைத்தனர். மேலும் அங்கிருந்த பொருட்களும் உடைக்கப்பட்டது.
நிலைமை கட்டுக்கு மீறி சென்றதால் போலீசார் தடியடி நடத்தி மாணவர்களை கலைத்தனர். இதில் 4 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. மாணவர்கள் தாக்கியதில் சில போலீசாரும் காயம் அடைந்தனர். மாணவர்கள் போராட்டம் காரணமாக அந்த பகுதியே போர்களம்போல காட்சி அளித்தது. #CBSEPaperLeak #CBSE

