

கும்பகோணம்:
கும்பகோணத்தை அடுத்துள்ளது கதிராமங்கலம் கிராமம். இங்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 7 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. கடந்த 30-ந்தேதி எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது எண்ணெய் குழாய் உடைப்பு ஏற்பட்டு இருந்த இடத்தின் அருகே போடப்பட்டு இருந்த முள்செடிகளில் மர்மநபர்கள் தீ வைத்தனர். இதனால் ஏற்பட்ட கலவரத்தில் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இது தொடர்பாக மீத்தேன் எதிர்ப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 10 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 10 பேரும் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தனர். அவர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும். கைது செய்யப்பட்ட 10 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஓ.என்.ஜி.சி. நிறுவனம் உடனடியாக வெளியேற வேண்டும் என கூறி கடந்த 1-ந்தேதி முதல் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கு போலீசாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டு இருந்தனர்.
கதிராமங்கலத்தில் இருந்து போலீசாரை வெளியேற்ற வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கடந்த 3-தேதி போலீசார் வெளியேற்றப்பட்டு குறைந்த எண்ணிக்கையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த நிலையில் இன்று 7-வது நாளாக கதிராமங்கலத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
மேலும் கதிராமங்கலம் ஊராட்சியை சேர்ந்த பொது மக்கள், நெசவாளர்கள் என 400-க்கும் மேற்பட்டவர்கள் அங்குள்ள அய்யனார்கோவில் வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். கதிராமங்கலத்தில் ஆட்டோக்கள், வாடகைகார்களும் இயங்கவில்லை.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், ‘‘போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். கைது செய்யப்பட்ட 10 பேரையும் எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். கதிராமங்கலம் கிராமத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் உடனடியாக வெளியேற வேண்டும். அதுவரை எங்களின் போராட்டம் தொடரும்’’என்றனர்.
இந்த நிலையில் பொது மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு மாணவர்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் வந்து கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்தியில் பேசும் போது, உங்களின் போராட்டங்களுக்கு நாங்கள் எப்போதும் துணை நிற்போம். நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இன்னும் பெரிய அளவிலான போராட்டத்தை முன்னெடுத்துச் சென்று ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும். நம்மால் இதனை கண்டிப்பாக செய்யமுடியும்’’ என்றனர். கதிராமங்கல கிராமத்தினருடன் மாணவர் அமைப்பு கைகோர்த்ததால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு மாணவர்கள் அமைப்பினரை ஒன்று கூட செய்ததில் சமூக வலைதளம் ஒருமுக்கிய பங்குவகித்தது. அதன்மூலம் பேஸ்புக், வாட்ஸ் அப் மூலமாக தகவல்கள் வேகமாக பரவியது. இதனால் சென்னை மெரினாவில் அதிக அளவிலான மாணவர்கள் அமைப்பினர் ஒரே இடத்தில் கூடினர். இதேபோல் தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் மாணவர்கள், இளைஞர்கள் ஒன்றுகூடி ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக நடத்திய போராட்டம் வெற்றி பெற்றது. அதேபோல் தற்போது கதிராமங்கலத்தில் நடந்து வரும் போராட்டங்களையும் உடனுக்குடன் தங்களது செல்போன்களில் பதிவேற்றம் செய்து அதனை பேஸ் புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பரவ விடுகின்றனர். அதனை பார்த்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கதிராமங்கலம் கிராமத்தினருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள் அமைப்பினர் ஒன்றுகூடி கதிராமங்கலம் கிராமத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தகவல் வந்துள்ளதால் கதிராமங்கலத்தில் மீண்டும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு தொடர்ந்து அசாதாரன சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.