முயல்களை வேட்டையாடி டிக்-டாக்கில் வீடியோ வெளியிட்ட மாணவர்கள் - ரூ.90 ஆயிரம் அபராதம்

முயல்களை வேட்டையாடி டிக்-டாக்கில் வீடியோ வெளியிட்ட பள்ளி மாணவர்கள் 6 பேருக்கு வன அதிகாரிகள் ரூ.90 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள எட்டுப்புளிக்காடு கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் 6 பேர், அங்கு உள்ள வனப்பகுதியில் வலை விரித்து காட்டு முயல்களை வேட்டையாடி உள்ளனர். பின்னர் அங்குள்ள வயலில் முயல்களை சமைத்து விருந்து நடத்தி உள்ளனர். தாங்கள் செய்த தவறை உணராத அவர்கள், விருந்து சாப்பிட்டதை வீடியோ எடுத்து ‘டிக்-டாக்’ செயலியில் பதிவேற்றம் செய்தனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

இதுபற்றி தகவல் அறிந்த பட்டுக்கோட்டை வனத்துறை அதிகாரிகள் டிக்-டாக்கில் வீடியோ வெளியிட்ட மாணவர்கள் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் 6 பேரும் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் என்பது தெரியவந்தது.

அவர்கள் 6 பேரையும் வன அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது 6 பேரும் தங்கள் தவறை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து பிடிபட்ட 6 பேருக்கும் தலா ரூ.15 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

வனவிலங்குகளை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம் என்றும், அவற்றை வேட்டையாடுபவர்கள் மீது இனிவரும் காலங்களில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com