

மாடுகளை இறைச்சிக்காக விற்பதற்கு தடை விதித்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.
கடந்த 28-ந்தேதி இரவு சென்னை கிண்டியில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி.யில் மாணவர்கள் சிலர் மாட்டு இறைச்சி உணவு திருவிழாவுக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.
இது தொடர்பான புகைப்பட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த நிலையில் நேற்று மதியம் ஐ.ஐ.டி. வளாகத்தில் உணவு சாப்பிட சென்ற கேரளாவை சேர்ந்த மாணவர் சூரஜ்ஜை மாணவர்கள் சிலர் சுற்றி வளைத்து தாக்கினர்.
இந்த தாக்குதலில் சூரஜ்ஜின் வலது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. மாட்டு இறைச்சி உணவு திருவிழாவுக்கு அவர் ஏற்பாடு செய்ததாக இந்த தாக்குதல் நடைபெற்று உள்ளது.
படுகாயம் அடைந்த சூரஜ்ஜுக்கு வானகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் மாணவர் சூரஜ் தாக்கப்பட்டதை கண்டித்து ஐ.ஐ.டி. வளாகத்தில் முன்புற வாசல் முன்பு மாணவர்கள் அமைப்பினர் இன்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், புரட்சிகர மாணவர் அமைப்பு, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பெண்களும் இதில் பங்கேற்றனர்.
அவர்கள் மாணவர் சூரஜ் தாக்கப்பட்டதை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது மாணவர்கள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து சாலையில் படுத்து உருண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக தூக்கி சென்று கைது செய்து வேனில் ஏற்றினர்.
இந்த போராட்டம் நடந்து கொண்டிருந்த போதே ஐ.ஐ.டி. வளாகத்தில் மற்றொரு நுழைவு வாயில் பகுதியில் பெரியார் திராவிடர் கழகத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் சமைத்து கொண்டு வந்திருந்த மாட்டு இறைச்சியை சாப்பிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர். கைதான அனைவரும் மயிலாப்பூர், கோட்டூர்புரம், அடையாறில் உள்ள சமுதாய கூடங்களில் தனித்தனியாக வைக்கப்பட்டு உள்ளனர்.
ஐ.ஐ.டி. வளாகம் முன்பு அடுத்தடுத்து நடந்த முற்றுகை போராட்டத்தில் பரபரப்பாக காணப்படுகிறது. மேலும் பல அமைப்புகள் முற்றுகை போராட்டத்தால் ஈடுபட திட்டமிட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதனால் ஐ.ஐ.டி. முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். தடுப்புகளும் அமைக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே ஐ.ஐ.டி. டீன் சிவக்குமார், மாணவர்களை மோதல் தொடர்பாக இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள், தாக்கிய மாணவர்கள் தனித்தனியாக அழைத்து பேசினார்.
இதேபோல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அமைப்பினர் சிலரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் கூறிய கோரிக்கைகளை டீன் சிவகுமார் ஏற்க மறுத்துவிட்டார். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தை தொடர்ந்து ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள அனைத்து வாசல்களும் மூடப்பட்டது. அடையாள அட்டை வைத்திருந்த மாணவர்கள், ஊழியர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
மாணவர் சூரஜ் தாக்கப்பட்டதை கண்டித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை ஐ.ஐ.டி.யில் படித்துக் கொண்டிருக்கும், கேரள மாநிலத்தை சேர்ந்த சூரஜ் என்கின்ற மாணவர் சகமாணவர்களுக்கு மாட்டிறைச்சி விருந்து அளித்த பொழுது, சக மாணவர்கள் அடித்து தாக்கிய சம்பவம் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்த பிரச்சினை இரு மாநில பிரச்சினையாக மாறாமல் தமிழக அரசு முழு கவனம் செலுத்த வேண்டும். இனிமேலும் இது போன்ற சம்பவங்கள் நடக்காதவாறு தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.