பள்ளியில் செப்டிக் டேங்க்கை சுத்தம் செய்த மாணவர்கள் மயக்கம் - ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ராமேசுவரம் அரசு பள்ளியில் செப்டிக் டேங்க்கை மாணவர்களை சுத்தம் செய்ய கூறிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பள்ளியில் செப்டிக் டேங்க்கை சுத்தம் செய்த மாணவர்கள் மயக்கம் - ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
Published on

ராமேசுவரம்:

ராமேசுவரம் தங்கச்சி மடம் அருகே உள்ளது மெய்யம்புலி மண்டபம். இங்குள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக பள்ளியில் உள்ள செப்டிக் டேங்க் நிரம்பி துர்நாற்றம் வீசியது. இதையடுத்து சில ஆசிரியர்கள், 7-ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்களை அழைத்து செப்டிக் டேங்க் மூடியை திறக்குமாறு கூறினர்.

3 பேரும் செப்டிக் டேங்கை திறந்த போது வி‌ஷவாயு தாக்கியது. இதில் மயக்கமடைந்தனர். மயக்கம் தெளிந்ததும் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

வீட்டுக்கு சென்ற அவர்களுக்கு தொடர் வாந்தி, பேதி ஏற்பட்டது. இதையடுத்து 3 மாணவர்களும் ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். பின்னர் அவர்கள் வீடு திரும்பினர்.

ஆசிரியர்களின் இந்த செயலுக்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாணவர்களை செப்டிக் டேங்க்கை சுத்தம் செய்ய சொல்லிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் சகாய சாமிளா கூறுகையில், பள்ளியில் துப்புரவு பணிகளை செய்ய மாணவ, மாணவிகளை அனுமதிப்பதில்லை.

எங்களுக்கு தெரியாமல் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆனால் மாணவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தது எனக்கு தெரியாது. புகாரில் உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com