பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி: தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

திசையன்விளை அருகே உள்ள தொடக்க பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் பலியான சம்பவம் குறித்து தலைமை ஆசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி: தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு
Published on

திசையன்விளை:

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள செம்பொன் விளையைச் சேர்ந்தவர் பட்டுராஜா. இவரது மகன் வருண் (வயது 8). இவண் மரக்கட்டுவிளையில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மதியம் இடைவேளையில் பள்ளி வளாகத்திற்குள் அறுந்து கிடந்த மின்வயரை வருண் தொட்டதாக தெரிகிறது. அப்போது மின்சாரம் தாக்கி வருண் தூக்கி வீசப்பட்டான். உடனடியாக அவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு நவ்வலடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் வருண் பரிதாபமாக உயிரிழந்தான்.

இதுகுறித்து பட்டுராஜா உவரி போலீசில் புகார் செய்தார்.

அவர் தனது புகாரில் கடந்த ஜனவரி மாதம் முதல் பள்ளி வளாகத்திற்குள் மின்வயர் அறுந்து கிடந்ததாகவும், பள்ளி தலைமை ஆசிரியர் இதுகுறித்து மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கவும் இல்லை. அதை சரிசெய்ய நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரது கவனக்குறைவாலேயே வருண் மின்சாரம் தாக்கி உயிர்இழந்துள்ளான். எனவே தலைமை ஆசிரியர் ஜெயசேகரன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். என கூறியிருந்தார்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஆதிலிங்க போஸ் விசாரணை நடத்தி பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயசேகரன் மீது வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் தலைமை ஆசிரியர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com