

திண்டுக்கல்:
மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தகுதித்தேர்வு நேற்று நாடு முழுவதும் நடந்தது. இதில் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகளுக்கு கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன. இதற்காக மிகுந்த சிரமத்துடன் சென்று அவர்கள் தேர்வு எழுதினர்.
இவ்வாறு மாநில எல்லை கடந்து கேரளாவில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள், தங்களின் மோசமான அனுபவங்களையும், மனக்குமுறல்களையும் சோகத்துடன் விவரித்தனர். அப்படி மாணவர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள் வருமாறு:-
மாணவி ஜெரிபா (குலசேகரம், கன்னியாகுமரி மாவட்டம்): எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவாவில் உள்ள அமல் பொதுப்பள்ளியில் எனக்கு தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. தேர்வுக்காக நேற்று முன்தினம் இரவே நான் தந்தையுடன் அங்கு சென்று ஓட்டலில் தங்கிவிட்டேன்.
மொழி பிரச்சினையால் காலையில் தேர்வு மையத்தை கண்டுபிடிக்க எங்களுக்கு வழி தெரியவில்லை. பின்னர், செல்போனில் ‘கூகுள் மேப்’ மூலமாக வழி கண்டறிந்து வாடகை காரில் தேர்வு மையத்துக்கு சென்றேன். தேர்வு கொஞ்சம் கடினம் தான். எனினும் அனைத்து கேள்விகளுக்கும் நான் பதிலளித்திருப்பது எனக்கு ஓரளவு திருப்திகரமாக இருக்கிறது.
நீட் தேர்வு எழுத செல்லும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு உதவித்தொகை அறிவித்தது காலங்கடந்த செயலாக தெரிகிறது. அதற்கு பதிலாக தமிழகத்திலேயே நிறைய மையங்களை ஏற்படுத்தியிருக்கலாம். தமிழக மாணவர்களுக்கு இவ்வளவு அதிக தூரத்தில் நீட் தேர்வு மையம் ஒதுக்கியது மன உளைச்சலை ஏற்படுத்தியது. அந்த மன உளைச்சலுடன் நீட் தேர்வு எழுதினேன்.
மாணவி ஆன்சிலின் ஜெனிட்டா (நாகர்கோவில்): எர்ணாகுளம் மாவட்டம் கட்டிபரம்பு பகுதியில் எனக்கு தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்காக நான் என் தாயாருடன் இன்று (அதாவது நேற்று) அதிகாலையில் தான் அங்கு சென்றேன். மொழி பிரச்சினையால் தேர்வு மையத்துக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர், இங்குள்ள தமிழர் ஒருவரின் உதவியால் தேர்வு மையம் இருக்கும் இடத்தை அறிந்து கொண்டு அவசர, அவசரமாக புறப்பட்டேன்.
நாகர்கோவிலில் இருந்து எர்ணாகுளம் வரை பயண தூரம் அதிகம். மேலும் நாங்கள் சென்ற இடத்தில் சாப்பிட வசதியில்லாமல் தெருத்தெருவாக அலைந்தோம். இந்த நீண்ட தூர பயணத்தால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானேன். தேர்வின்போது சில நேரங்களில் அதிக சோர்வும் ஏற்பட்டது. எனவே அடுத்த முறையாவது சரியாக திட்டமிட்டு, மாணவர்களின் நலனுக்கான விஷயங்களை அரசு செய்ய வேண்டும்.
குருபிரசாத் (நத்தம்): எனக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது. கடைசி கட்டத்தில் கேரளாவில் தேர்வு மையம் ஒதுக்கியதால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன். பின்னர் ஒரு தனியார் நிறுவனம் மூலமாக நேற்றுமுன்தினம் காலையில் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு எர்ணாகுளம் சென்றோம்.
நீண்டதூர பயணத்தால் உடல் சோர்வாகவே இருந்தது. இதனால் தேர்வுக்கு முந்தைய நாள் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. அத்துடன் தேர்வு அறைக்குள் செல்ல கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்ததால் பதற்றமாகவே இருந்தேன். இதனால் தேர்வில் முழு கவனத்தையும் செலுத்த முடியவில்லை.
நீட் தேர்வில் கேட்கப்பட்டிருந்த வினாக்களில் இயற்பியல் பாடப்பகுதி மிகவும் கடினமாக இருந்தது. மற்ற பாடங்கள் விடையளிக்கும்படி இருந்தன. வினாக்கள் அனைத்தும் சி.பி.எஸ்.இ. பாட பகுதிகளில் இருந்து தான் கேட்கப்பட்டிருந்தன. தேர்வில் நிச்சயம் வெற்றி பெற்று டாக்டர் ஆவேன் என்ற நம்பிக்கை உள்ளது.
விஷ்வபாரதி (திண்டுக்கல்): நான் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்து, அதற்காக நன்கு தயாராகி இருந்தேன். எனக்கு எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கியதை கடைசி நேரத்தில் சி.பி.எஸ்.இ. தெரிவித்ததால் ரெயிலில் தட்கல் டிக்கெட் கூட எடுக்க முடியவில்லை. எனவே ஒரு தனியார் நிறுவனத்தின் உதவியுடன் கேரளாவுக்கு சென்றேன்.
நேற்றுமுன்தினம் காலையில் புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு தான் கேரளாவுக்கு செல்ல முடிந்தது. எந்த தேர்வாக இருந்தாலும் படித்த பாடங்கள் அனைத்தையும், தேர்வுக்கு முந்தைய நாள் மீண்டும் படிப்பது அனைவருடைய பழக்கம் ஆகும். ஆனால் கேரளாவுக்கு செல்ல இரவாகி விட்டதால், என்னால் அனைத்து பாடங்களையும் படிக்க முடியவில்லை.
அடுத்த ஆண்டாவது நீட் தேர்வுக்கான மையத்தை அந்தந்த மாநிலங்களில் அமைக்க சி.பி.எஸ்.இ. நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் மாணவர்களின் சிரமம், வீண் அலைச்சல் தவிர்க்கப்படுவதால் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்த முடியும்.
ஹர்ஷினி (பழனி):- நான் எனது பெற்றோருடன் கடந்த 5-ந்தேதி எர்ணாகுளத்துக்கு வந்தேன். வெளிமாநிலம் என்பதால் நான் பதற்றமாகவே இருந்தேன். ஆனால் இங்குள்ளவர்கள் என்னுடன் பழகிய விதம் எனது பதற்றத்தை அகற்றியது. ரெயில் நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் தேர்வு மையம் இருந்தது. இதனை கண்டுபிடிக்க இங்குள்ள ஆட்டோ டிரைவர்கள் உதவினர்.
மேலும் குறைந்த கட்டணத்தில் எங்களுக்கு விடுதியில் அறையும் கிடைத்தது. எனவே அடுத்த நாள் (நேற்று) காலையில் எந்தவித மன உளைச்சலும் இன்றி நான் தேர்வு எழுத சென்றேன். தேர்வு மையத்தில் இருந்தவர்கள் எனக்காக ஒதுக்கப்பட்ட அறையை கண்டுபிடிக்க உதவினர். தேர்வும் எளிதாக இருந்தது. நிச்சயம் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பில் சேருவேன்.
பாலசந்தர் (போடி): நேற்று முன்தினம் போடியில் இருந்து பஸ் மூலமாக எனது தந்தையுடன் எர்ணாகுளம் சென்றேன். மலைப்பாதையில் பயணம் செய்ததால் குமட்டல், வாந்தி என்று உடல்நிலை சரியில்லாமல் போனது. இரவு தங்குவதற்காக ஒரு விடுதிக்கு சென்றால் கட்டணம் அதிகமாக இருந்தது. இதையடுத்து குறைந்த கட்டணத்தில் ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினோம். அதற்குள் இரவு 11 மணி ஆகிவிட்டது.
பின்னர் நேற்று அதிகாலையிலேயே எழுந்து தேர்வு மையத்தை தேடி, 7 மணிக்கு கண்டுபிடித்தேன். ஒரு நாள் முழுவதும் அங்குமிங்குமாக அலைந்ததால் படிப்பதற்கு நேரமில்லாமல் போனது. இதனால் மிகுந்த மன உளைச்சலுடனேயே தேர்வு எழுதினேன்.