குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 75 சதவீதமாக சரிந்தது

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குடி நீர்ஏரிகளில் 2 டி.எம்.சி.தண்ணீர் குறைவாக உள்ளது.புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கனஅடி. இதில் 2253 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 75 சதவீதமாக சரிந்தது
Published on

திருவள்ளூர்:

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

தற்போது கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு இருப்பு 75 சதவீதமாக சரிந்து உள்ளது. 5 ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 8 ஆயிரத்து 931 மில்லியன் கனஅடிதண்ணீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 10 டி.எம்.சிக்கும் மேல் இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குடிநீர் ஏரிகளில் 2 டி.எம்.சி.தண்ணீர் குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் உயரும்போது குடிநீர் தேவை அதிகரித்து ஏரிகளில் தண்ணீர் இருப்பு வேகமாக குறையும். ஏற்கனவே கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் தண்ணீர் முழுவதும் வற்றியதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டு விட்டது. இதைத்தொடர்ந்து கோடை காலத்தில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீரை பெற அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கனஅடி. இதில் 2253 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. சென்னை குடிநீர் தேவைக்காக 159 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது.

சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 745 மி.கனஅடி தண்ணீரும், பூண்டி ஏரியில் மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் 2404 மி.கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3645மி.கனஅடியில் 3064 மி.கனஅடியும், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500மி.கனஅடியில்465 மி.கனஅடியும் தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com