தினகரனை ஆதரிக்கும் 19 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் மீண்டும் நோட்டீசு

டி.டி.வி. தினகரனை ஆதரித்து புதுவையில் தங்கியுள்ள 19 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் தனபால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினகரனை ஆதரிக்கும் 19 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் மீண்டும் நோட்டீசு
Published on

அ.தி.மு.க. அணிகள் இணைப்பைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அவர்களை தினகரன் புதுவையில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளார். முதலில் 19 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் தினகரன் அணியில் சேர்ந்தனர்.

அதன் பிறகு மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள் தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதனால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது. மேலும் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பக்கம் வருவார்கள் என்று தினகரன் ஆதரவாளர்களான தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் ஆகியோர் கூறி வருகிறார்கள்.

19 எம்.எல்.ஏ.க்களும் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடிதம் கொடுத்தனர். அவருக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும், கவர்னர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

இதற்கிடையே 19 எம்.எல்.ஏ.க்கள் கட்சி கட்டளையை மீறி விட்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிபாரிசு செய்து சபாநாயகர் தனபாலிடம் அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் கடிதம் கொடுத்தார்.

அதன் பேரில் சபாநாயகர் தனபால் 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் விளக்கம் கேட்டு கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பினார்.


ஆனால் தங்களுக்கு சபாநாயகரிடம் இருந்து எந்த நோட்டீசும் வரவில்லை என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கூறி வந்தனர்.

நேற்று முன்தினம் எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், ஏழுமலை ஆகியோர் சட்டசபை செயலாளர் பூபதியை சந்தித்து விளக்கம் அளித்தனர்.

இந்த நிலையில் 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் தனபால் இன்று மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

அதில் கடந்த 30-ந்தேதி 19 எம்.எல்.ஏ.க்கள் நான் அனுப்பிய நோட்டீசுக்கு விளக்கம் அளித்துள்ளனர். இதை இடைக்கால விளக்கமாகவே கருத முடியும். எனவே வருகிற 5-ந்தேதிக்குள் முழுமையான விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

19 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி இருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சி கட்டளையை மீறியதாக 19 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க வாய்ப்பு உள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமியை மட்டுமே முதல்-அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும், அரசுக்கு எதிராக நாங்கள் செயல்பட மாட்டோம் என்று 19 எம்.எல்.ஏ.க்களும் கூறி வருகிறார்கள். அவர்களது கோரிக்கையை கவர்னரும் ஏற்கவில்லை, அது கட்சி வி‌ஷயம் என்று கூறி விட்டார்.

இதனால் எடப்பாடி அரசு மெஜாரிட்டியை இழந்து விட்டதாக தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.

தற்போது சபாநாயகர் அனுப்பிய புதிய நோட்டீசுக்கு என்ன விளக்கம் அளிப்பார்கள் என பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது.

சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ள 19 எம்.எல்.ஏ.க்கள் பெயர் விவரம் வருமாறு:-

1. தங்க. தமிழ்ச்செல்வன்

2. பழனியப்பன்

3. வெற்றிவேல்

4. ஏழுமலை

5. பார்த்தீபன்

6. ஜெயந்தி பத்மநாபன்

7. பாலசுப்பிரமணி

8. செந்தில்பாலாஜி

9. முருகன்

10. ரங்கசாமி

11. மாரியப்பன் கென்னடி

12. கதிர்காமு

13. ஜக்கையன்

14. முத்தையா

15. சுந்தர்ராஜூ

16. சந்திரபிரபா

17. தங்கதுரை

18. கோதண்டபாணி

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com