வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: ராஜஸ்தானில் வெள்ளப்பெருக்கு

வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. ராஜஸ்தானில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: ராஜஸ்தானில் வெள்ளப்பெருக்கு
Published on

தென்மேற்கு பருவமழை வட மாநிலங்களில் தற்போது தீவிரம் அடைந்து வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டியது. இதனால் பல ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. தாழ்வான பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

சவாய் மதோப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கால்வாயில் குளித்த 3 சிறுவர்கள் மழை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் பிணமாக மீட்கப்பட்டனர். இதேபோல் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கால்வாயில் குளித்த பேராசிரியர் ஒருவர் மழை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு இறந்தார். பின்னர் அவருடைய உடல் மீட்கப்பட்டது.

தொடர் மழை காரணமாக அஜ்மீர், அபுரோடு உள்ளிட்ட பகுதிகளில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து செல்லும் ரெயில்களும், வெளியூர்களில் இருந்து இங்கு வரும் ரெயில்களும் ரத்து செய்யப்பட்டன. சில இடங்களில் சாலை போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.

மணிப்பூர் மாநிலம் இம்பால் பள்ளத்தாக்கு பகுதிகளில் கனமழை பெய்தது. இம்பாலில் உள்ள ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டு மழை வெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது. இதையடுத்து 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த மக்கள் மழை வெள்ளத்தில் சிக்கினர். அவர்களை அதிகாரிகள் மீட்டு முகாம்களில் தங்க வைத்தனர். மேலும் தாழ்வான பகுதிகளில் இருந்தவர்களும் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. கன மழையால் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதிகளில் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

அருணாசல பிரதேச மாநிலத்திலும் பல இடங்களில் பலத்த மழை கொட்டியது. இதனால் பல்வேறு பகுதிகளில் வீடுகள் சேதம் அடைந்தன. நெடுஞ்சாலைகளில் மண் சரிவு ஏற்பட்டது. தொடர் மழை மற்றும் மண் சரிவால் மற்ற பகுதிகளில் இருந்து தலைநகர் இட்டாநகர் துண்டிக்கப்பட்டது.

குஜராத், மராட்டிய மாநிலங்களில் கன மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. சாலை மற்றும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வடக்கு மற்றும் தெற்கு கர்நாடகாவிலும் மழை கொட்டி தீர்த்தது. கொல்லூரில் அதிகபட்சமாக 25 செ.மீ. மழை பெய்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com