

சென்னை :
தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் (மே) 30-ந்தேதி கேரளாவில் தொடங்கியது. பொதுவாக தென்மேற்கு பருவமழையால் கேரளா, கடலோர கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் தான் அதிக மழை இருக்கும். தமிழகத்தை பொறுத்தவரையில் வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் அதிகளவு மழை பதிவாகும். தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் சராசரியாக 32 செ.மீ. மழை பதிவாகும்.
இந்த நிலையில் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருவதாகவும், மற்ற இடங்களிலும் தென்மேற்கு பருவமழை பரவுவதற்கு சாதகமான சூழல் ஏற்பட்டு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கேரளாவில் கடந்த 30-ந்தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை, தற்போது தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் வரை பரவி இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று) தென்தமிழகம் மற்றும் மேற்கு பகுதி மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்து இருக்கிறது.
அடுத்து வரும் 2 அல்லது 3 தினங்களில் தென்மேற்கு பருவமழை தமிழகத்தின் பிறபகுதிகளிலும் பரவுவதற்கு சாதகமான சூழல் ஏற்பட்டு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பும் உள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது. அடுத்து வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும். கேரளா மற்றும் கர்நாடகாவில் இனி வரும் நாட்களில் மழை அதிகமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-
பாபநாசம் 14 செ.மீ., வலங்கைமான் 8 செ.மீ., ஈரோடு, நன்னிலம் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ., நத்தம், கொடவாசல், அரியலூர், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ., மேட்டுப்பட்டி, திருவாடனை, கும்பகோணம் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ., காரைக்கால், நாகப்பட்டினம், திருமானூர், திருவிடைமருதூர், ஜெயம்கொண்டம் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது.