தென்சென்னை தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் வீதிவீதியாக ஓட்டு சேகரிப்பு

பாராளுமன்ற தேர்தலில் தென்சென்னை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக டாக்டர் ஜெயவர்தன் போட்டியிடுகிறார். அவர் இன்று வாக்கு சேகரிக்கும் பணியை தொடங்கினார். #ADMK
தென்சென்னை தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் வீதிவீதியாக ஓட்டு சேகரிப்பு
Published on

சென்னை:

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அருகே சாமி கும்பிட்டு விட்டு தனது பிரசார பயணத்தை தொடங்கினார். திறந்த ஜீப்பில் நின்றபடி வீதிவீதியாக சென்று அவர் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்காளர்களை பார்த்து கும்பிட்டபடி இரட்டை இலை சின்னத்துக்கு அவர் ஓட்டு கேட்டார்.

வேட்பாளர் ஜெயவர்தனுடன் மாவட்ட செயலாளர் வி.என்.ரவி, ஆர்.நட்ராஜ் எம்.எல்.ஏ. பா.ம.க. மாவட்ட செயலாளர் சிவகுமார், தே.மு.தி.க. ஆனந்தன், பா.ஜ.க டால்பின் ஸ்ரீதர், த.மா.கா கொட்டிவாக்கம் முருகன், அ.தி.மு.க. பகுதி செயலாளர் டி.ஜெயசந்தின், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கந்தன், அசோக், வட்ட செயலாளர் தங்கதுரை என்கிற பாபு உள்பட அ.தி.மு.க, பா.ம.க., தே.மு.தி.க, பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

பிரசாரத்தின் போது வழி நெடுகிலும் பெண்கள் ஆரத்தி எடுத்தும், மாடியில் நின்று பூக்கள் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அருகே தொடங்கிய பிரசாரம் சாந்தோம் நெடுஞ்சாலை வழியாக சென்று கலங்கரை விளக்கம் அருகே முடிவடைந்தது. பிரசாரத்தின் இடையே ஜெயவர்தன் மாலை மலர் நிருபரிடம் கூறியதாவது :-

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி மக்களுக்கு நன்மை செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட கூட்டணி. மயிலாப்பூர் தொகுதி மட்டுமல்ல 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவது நிச்சயம்.

ஜெயலலிதா ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த பொன்னான நலத்திட்டங்கள் இன்றும் நினைவு கூறத்தக்கவையாக உள்ளது. தமிழகத்தில் மக்கள் நலத்திட்டங்களும், ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எண்ணற்றவை நிறைவேற்றப்பட்டுள்ளன.

எம்.பி. மேம்பாட்டு நிதி மூலம் தென்சென்னை தொகுதியில் ஏராளமான நலத்திட்டங்களை வளர்ச்சி பணிகளை நிறைவேற்றி உள்ளேன். ஜெயலலிதாவின் சாதனைகளை சொல்லி நாங்கள் மக்களிடம் வாக்குகளை சேகரித்து வருகிறோம். நிச்சயம் இந்த பாராளுமுன்ற தேர்தலில் வெற்றி பெற்று மாநில உரிமையை நிலைநாட்டுவோம்.

இவ்வாறு வேட்பாளர் ஜெயவர்தன் கூறினார். #ADMK

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com