3வது டி-20 போட்டி - தென் ஆப்ரிக்காவுக்கு 173 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணி 173 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது. #INDvSA #SAvIND #3rdT20
3வது டி-20 போட்டி - தென் ஆப்ரிக்காவுக்கு 173 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா
Published on

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணி 173 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. முதலில் விளையாடிய டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி பறிகொடுத்தது. அதையடுத்து நடைபெற்ற ஒரு நாள் தொடரை 5-1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணி வரலாறு படைத்தது.

இதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி கேப்டவுனில் இன்றிரவு தொடங்கியது.

டாஸ் வென்ற தென்ஆப்ரிக்கா அணி கேப்டன் டுமினி பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். இரண்டாவது ஓவரில் ரோகித் சர்மா 8 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 11 ரன்களில் அவுட்டானார்.

அவரை தொடர்ந்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா தவானுடன் ஜோடி சேர்ந்தார். ரெய்னா அதிரடியாக ஆடினார். இவர் 27 பந்துகளில் ஒரு சிக்சர், 5 பவுண்டரியுடன் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 79 ஆக இருந்தது.

இதையடுத்து, மணீஷ் பாண்டே இறங்கினார். அவர் 10 பந்துகளில் ஒரு சிக்சருடன் 13 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரை தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யா களமிறங்கினார்.

விக்கெட்டுகள் ஒருபுறம் வீழ்ந்தாலும், ஷிகர் தவான் ஓரளவு தாக்குப்பிடித்தார். ஆனால் அவர் 40 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 47 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். அப்போது அணியின் எண்ணிக்கை 126 ஆக இருந்தது. தோனி 11 பந்துகளில் 12 ரன்களும், தினேஷ் கார்த்திக் 13 ரன்களும், பாண்ட்யா 21 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.

இறுதியில், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. அக்சர் படேல் ஒரு ரன்னுடனும், புவனேஷ்வர் குமார் 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com