

செஞ்சுரியனில் நடந்த இரண்டாவது டி-20 போட்டியில் கிளாசன் மற்றும் கேப்டன் டுமினியின் சிறப்பான ஆட்டத்தால் தென் ஆப்ரிக்கா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் கொண்ட தொடரை தென்ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கிலும், 6 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 5-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.
3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஜோகன்ஸ்பர்க்கில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி செஞ்சூரியனில் இன்று நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்தியா சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் களமிறங்கினர். இரண்டாவது ஓவரை ஜூனியர் டாலா வீசினார். முதல் பந்திலேயே ரோகித் சர்மாவை அவுட்டாக்கி இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தார். தொடர்ந்து சுரேஷ் ரெய்னா இறங்கினார். ஷிகர் தவான் 14 பந்துகளில் 2 சிக்சர், 3 பவுண்டரியுடன் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி ஒரு ரன் எடுத்து அவுட்டானார்.
அடுத்து களமிறங்கிய மணீஷ் பாண்டே ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடினர். ரெய்னா 24 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 30 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரையடுத்து தோனி இறங்கினார்.
மணீஷ் பாண்டேவும் தோனியும் பொறுப்புடனும், அதிரடியாகவும் ஆடி அரை சதமடித்து அசத்தினர். இருவரும் சிக்சர்களும் பவுண்டரிகளுமாக அடித்தனர். இறுதியில், இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. மணீஷ் பாண்டே 48 பந்துகளில் 3 சிக்சர், 6 பவுண்டரியுடன் 79 ரனனுடனும், தோனி 28 பந்துகளில் 3 சிக்சர், 4 பவுண்டரியுடன் 52 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
தென் ஆப்ரிக்கா அணி சார்பில் ஜூனியர் டாலா 2 விக்கெட்டும், டுமினி, பெலுகோவோயா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்ரிக்கா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஹென்ரிக்ஸ்,ஸ்மட்ஸ் ஆகியோர் விளையாடினர்.
4-வது ஓவரில் அந்த அணியின் ஸ்மட்ஸ் 2 ரன்களில் அவுட்டானார். அடுத்து கேப்டன் இறங்கினார். ஹென்ரிக்ஸ் 17 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 26 ரன்கள் எடுத்து அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 2 விக்கெட்டுக்கு 38 ஆக இருந்தது.
அவரை தொடர்ந்து கிளாசன் களமிறங்கினார். அவர் தனது அதிரடியால் தென் ஆப்ரிக்காவை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். அவர் 30 பந்துகளில் 7 சிக்சர்கள், 3 பவுண்டரியுடன் 69 ரன்கள் எடுத்து அவுட்டானார். கிளாசன் - டுமினி ஜோடி 93 ரன்கள் சேர்த்தது.
அடுத்து இறங்கிய மில்லர் 5 ரன்களில் அவுட்டானார். அப்போது தென் ஆப்ரிக்கா அணி 4 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்திருந்தது.
கேப்டன் டுமினி நிதானமாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியில், அந்த அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் டுமினி 40 பந்துகளில் 3 சிக்சர், 4 பவுண்டரியுடன் 64 ரன்களுடனும், பெஹார்டியன் 10 பந்துகளில் ஒரு சிக்சருடன் 16 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்திய அணியின் சார்பில் உனத்கட் 2 விக்கெட்டும், ஷர்துல் தாகுர் மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.