இந்தியா - இத்தாலி இடையே 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமானது

டெல்லி வந்துள்ள இத்தாலி பிரதமர் பாலோ ஜென்ட்டிலோனி முன்னிலையில் இந்தியா - இத்தாலி இடையே இன்று ஆறு முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமானது.
இந்தியா - இத்தாலி இடையே 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமானது
Published on

இத்தாலி பிரதமர் பாலோ ஜென்ட்டிலோனி தனது மனைவி எமானுல்லாவுடன் இரண்டு நாள் அரசுமுறைப்பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார். இன்று காலை அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இதனையடுத்து, பாலோ ஜென்ட்டிலோனி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர்.

பின்னர், மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ்ஜை சந்தித்து பேசிய ஜென்ட்டிலோனி, பின்னர் ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையே உள்ள பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்தியா-இத்தாலி இடையிலான அரசியல், பொருளாதார உறவுகளை பலப்படுத்துவது மற்றும் சர்வதேச பிரச்சனைகள் குறிப்பாக இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்புக்கு பின்னர் ரெயில்வே துறை பாதுகாப்பு, எரிசக்தி, இருதரப்பு முதலீடுகள் தொடர்பாக 6 முக்கிய ஒப்பந்தங்களில் இந்தியாவும், இத்தாலியும் கையொப்பமிட்டன.


பின்னர் இருநாட்டு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தனர். பெருகிவரும் தீவிரவாத அச்சுறுத்தல், சைபர் குற்றங்கள் ஆகியவற்றை எதிர்கொள்வது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இன்று ஆலோசிக்கப்பட்டதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இந்தியா- இத்தாலி இடையிலான 70 ஆண்டு கால நட்புறவை குறிக்கும் வகையில் இரு நாட்டு தலைவர்களும் நினைவு தபால் தலையை வெளியிட்டனர்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக தொடர்புகளை வைத்திருக்கும் ஐந்தாவது நாடான இத்தாலி - இந்தியா இடையில் 2016-2017 நிதியாண்டில் நடைபெற்ற வர்த்தக பரிமாற்றம் 8.79 பில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com