சிவகங்கை அருகே வாலிபர் கொலையில் மேலும் 3 பேர் கைது

சிவகங்கை அருகே வாலிபர் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது
கைது
Published on

சிவகங்கை:

சிவகங்கை அருகே உள்ள வாணியங்குடியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் ராஜேஷ் (வயது 16). இவர் கோவையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு ஊர் திரும்பிய ராஜேஷ் நேற்று மாலை வீட்டின் அருகே நண்பர்கள் சுதந்திரராஜன், அர்ச்சுணன் ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு 7 பேர் கும்பல் வந்தது. அந்த கும்பல் ராஜேசை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது நண்பர்கள் சுதந்திர ராஜன், அர்ச்சுணன் ஆகியோர் காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

கொலை குறித்த தகவல் கிடைத்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மங்களேஸ்வரன், துணை சூப்பிரண்டு அப்துல்கபூர், இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் இடம் தொடர்பான முன்விரோதத்தில் கொலை நடந்திருப்பது தெரிய வந்தது. ராஜேஷ் குடும்பத்திற்கும் அதே பகுதியைச் சேர்ந்த குதாம் சேகர் குடும்பத்திற்கும் இடப் பிரச்சினை இருந்துள்ளது.

இதில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குதாம் சேகரை ராஜேஷ் தரப்பினர் வெட்டினர். இந்த முன் விரோதத்தில் ராஜேசை, சேகரின் மகன்கள் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொன்றது தெரிய வந்தது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் குதாம் சேகரின் மகன்கள் தயாநிதி (25) பாண்டித்துரை (19) தம்பிதுரை (21) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் சம்பவம் தொடர்பாக தயாநிதியின் நண்பர்கள் வெற்றிவேல், மருது பாண்டி, தினேஷ் குமார் ஆகியோரை நேற்று இரவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com