பொறையார் விபத்தில் பலியானவர்களுக்கு டிரைவர்-கண்டக்டர்கள் மவுன அஞ்சலி

விருதுநகர் மற்றும் சோழவந்தானில் பணிமனை விபத்தில் பலியானவர்களுக்கு டிரைவர்- கண்டர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். இதனால் ஒரு மணி நேரம் தாமதமாக பேருந்துகள் இயக்கப்பட்டது.
சாத்தூர் பணிமனை முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
சாத்தூர் பணிமனை முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
Published on

நாகை மாவட்டம், பொறையாரில் அரசு போக்குவரத்து கழக பணிமனை கட்டிடத்தின் ஒரு பகுதியில் மேற்கூரை நேற்று திடீரென இடிந்து விழுந்தது. இதில், அங்கு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த டிரைவர்கள், கண்டக்டர்கள் 8 பேர் இடிபாடுகளில் சிக்கி பலியானார்கள். மேலும் பலர் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் போக்குவரத்துக்கழக ஊழியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பணிமனை கட்டிடம் சீரமைக்கப்படாமல் இருந்ததற்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.

விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், விருதுநகர் மாவட்டத்தில் அரசு போக்குவரத்துக்கழக அனைத்து பணிமனைகளிலும் இன்று (சனிக்கிழமை) காலை மவுன அஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது.

அதிகாலை 4.30 மணிக்கு பணிமனையில் இருந்து பஸ்களை எடுக்க வந்த டிரைவர்கள், கண்டக்டர்கள் இந்த அஞ்சலி கூட்டத்தில் பங்கேற்றனர். சில பணி மனைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன் காரணமாக பணிமனைகளில் இருந்து காலை 4.30 மணிக்கு எடுக்கப்பட வேண்டிய பஸ்கள், காலை 6 மணியளவிலேயே வெளியே சென்றன. சுமார் 1 மணி நேரம் தாமதமாக பஸ்கள் வந்ததால், பஸ் நிலையங்கள் மற்றும் நிறுத்தங்களில் காத்திருந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

சாத்தூர் போக்குவரத்துக்கழக பணிமனை தொழிலாளர்கள் பணிமனை முன்பு மவுன அஞ்சலி செலுத்தினர். பின்பு சாத்தூர் பணிமனை கட்டிடத்தை புதுப்பிக்கக் கோரியும், கட்டிட விபத்தில் இறந்த தொழிலாளர்களுக்கு ரூ. 20 லட்சம் நஷ்டஈடு வழங்கக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையிலும் இன்று காலை டிரைவர்- கண்டக்டர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து அஞ்சலி கூட்டம் நடத்தினர். இதனால் இந்த பணிமனையில் இருந்து இயக்கப்படும் 53 அரசு பஸ்களும் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com