பனாமாகேட் ஊழல் வழக்கு: பாகிஸ்தான் பிரதமரின் சகோதரரிடம் புலனாய்வுக் குழு விசாரணை

பாகிஸ்தானில் ‘பனாமா கேட்’ ஊழல் தொடர்பாக கூட்டு விசாரணைக்குழு முன் பிரதமரின் சகோதரர் இன்று ஆஜராகி, அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
பனாமாகேட் ஊழல் வழக்கு: பாகிஸ்தான் பிரதமரின் சகோதரரிடம் புலனாய்வுக் குழு விசாரணை
Published on

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த பிரபலங்கள், சட்டவிரோதமாக வெளிநாடுகளில் ரகசிய முதலீடுகள் செய்திருப்பதாகவும், வங்கிகளில் ரகசியமாக பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகவும் சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பு ‘பனாமா லீக்ஸ்’ என்ற பெயரில் கடந்த ஆண்டு ஆவணங்கள் வெளியிட்டது. இது ‘பனாமா கேட்’ ஊழல் என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஊழலில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும், அவரது குடும்பத்தினரும் சிக்கியுள்ளனர். இது தொடர்பாக அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு, ஜே.ஐ.டி. என்னும் கூட்டு புலனாய்வுக்குழு விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.ஐ.ஏ.யின் கூடுதல் தலைமை இயக்குனர் வாஜித் ஜியா தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு புலனாய்வுக்குழு அமைத்து, விசாரணை நடந்து வருகிறது.

இந்த விசாரணைக்குழு கடந்த மாதம் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகன்களான உசைன், ஹசன் ஆகியோரிடம் விசாரைண நடத்தியது. சமீபத்தில் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை அழைத்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், இன்று அவரது இளைய சகோதரரும் பஞ்சாப் மாகாண முதலமைச்சருமான ஷெபாஸ் ஷெரீப் (65) விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அதன்படி இன்று ஷெபாஸ் ஷெரீப் ஆஜரானார். அவருடன் அவரது மகன் ஹம்சா ஷெபாஸ், உள்துறை மந்திரி சவுதாரி நிசார், நிதி மந்திரி ஈசாக் தர் ஆகியோரும் கூட்டு புலனாய்வுக்குழு அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.

அப்போது, ஷெபாஸ் ஷெரீப்பிடம், பனாமாகேட் ஊழல் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி, விவரங்களை பதிவு செய்தனர். வழக்கு தொடர்பாக அதிகாரிகள் கேட்ட அனைத்து விவரங்களையும் அளித்ததாக ஷெபாஸ், நிருபர்களிடம் தெரிவித்தார்.

மேலும், ‘துப்பாக்கி முனையில் ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவ ஆட்சியாளர்கள் போன்று அல்லாமல் எங்கள் குடும்பம் சட்டத்திற்கு மதிப்பு அளிக்கிறது என்பதை நாங்கள் நிரூபித்து இருக்கிறோம்’ என்றும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com