

தூத்துக்குடி:
தூத்துக்குடி பழைய பஸ்நிலையம் அருகே அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மாஅணி) சார்பில் நகர அண்ணா தொழிற்சங்கம் தொடக்கவிழா இன்று நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக சண்முகநாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தொழிற்சங்கத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி டெப்போவில் 115 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த தொழிற்சங்கத்தில் 56 பேர் இணைந்துள்ளனர். இன்னும் 40 பேர் சேர உள்ளனர்.
கூவத்தூர் விடுதியில் எம்.எல்.ஏ.க்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் போது ஒவ்வொருவருக்கும் தலா ரூ.5 கோடி பேரம் பேசப்பட்டது. அப்போது உடனடியாக ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களுக்கும் ரூ.2 கோடி வழங்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கவேண்டும்.
எடப்பாடி அணியினர் தேர்தல் ஆணையத்தில் பொதுச்செயலாளராக சசிகலா, துணைப்பொதுச்செயலாளராக தினகரன் என அபிடவிட் தாக்கல் செய்துள்ளனர். ஆனால் எடப்பாடி அணியினர் சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்து விட்டோம் என நாடகமாடுகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் சண்முகநாதன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஓ.பி.எஸ்.அணியில் இருந்து நீங்கள் வெளியேறினால் உங்களுக்கு ரூ.5 கோடி தருவதாக எடப்பாடி மற்றும் தினகரன் அணியினர் தற்போது வரை என்னுடன் பேரம் பேசி வருகிறார்கள். இரு அணிகள் இணைப்பு குறித்து தலைவர்கள் முடிவு செய்வார்கள்.
அமைச்சர் விஜயபாஸ்கர் ஊழலில் ஈடுபட்டது தொடர்பாக அவர் மீது முதலமைச்சர்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும். எடப்பாடி அரசின் மீது சாதாரண மனிதனாக நடிகர் கமலஹாசன் குற்றம் சாட்டினார். எனவே அவரை அமைச்சர்கள் மிரட்டக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.