

பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக எழுந்த ‘பனாமா கேட்’ ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு கூட்டு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
கூட்டு புலனாய்வுக் குழுவின் விசாரணை அறிக்கையை ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம், நவாஸ் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறி, அவரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, 28--7-2017 அன்று அவர் பதவியை விட்டு விலகினார்.
மேலும், பாகிஸ்தான் நாட்டை ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சியின் தலைவர் பதவியில் அவர் நீடிக்கவும், அக்கட்சிசார்ந்த அவரது முடிவுகளை அமல்படுத்தவும் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
இதையடுத்து, அக்கட்சியின் தலைவர் பதவி காலியாக இருந்து வந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சியின் இடைக்கால தலைவராக நவாஸ் ஷெரீப் தம்பியும், பஞ்சாப் மாகாண முதல் மந்திரியுமான ஷாபாஸ் ஷெரீப் இன்று தேர்வாகியுள்ளார்.
லாகூரில் உள்ள நவாஸ் ஷெரீப் இல்லத்தில் ஆளும்கட்சியின் மத்திய உயர்மட்ட கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது காலியாக இருக்கும் கட்சி தலைவர் பொறுப்புக்கு தனது தம்பி ஷாபாஸ் ஷெரீப் பெயரை முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் முன்மொழிந்தார். இதை பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் காகான் அப்பாஸி ஏற்று கொண்டார்.